

அதிமுகவில் தர்மயுத்தம் முடிந்து, மர்மயுத்தம் நடக்கிறது என, மதுரையில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பேசினார்.
மதுரை மேற்கு தொகுதி திமுக வேட்பாளர் சின்னம்மாவை ஆதரித்து, தேர்தல் பரப்புரை கூட்டம், ஜெய்ஹிந்புரம் ஜீவா நகரில் இன்று நடந்தது. திராவிடர் கழகத்தலைவர் கி. வீரமணி, சின்னம்மாவுக்கு ஆதரவு திரட்டினார்.
அவர் பேசியது:
எந்த வழியிலாவது தமிழகத்தை மீட்டெடுக்க வேண்டும். எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல்நாட்டிய பிரதமர், நிச்சயம் வரும் என்கிறார். இந்த மகா திட்டத்திற்கு மத்திய பட்ஜெட்டில் என்ன நிதி ஒதுக்கினீர்கள் என, ஸ்டாலின் கேள்வி கேட்டபோது, தனியார் நிதி நிறுவனத்தில் கடன் கேட்டு இருக்கிறோம். அது வந்தபின் செயல்படுத்துகிறோம் என்கிறார்கள்.
இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றி வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அதிமுகவில் தர்மயுத்தம் முடிந்து, தற்போது மர்மயுத்தம் நடக்கிறது. மே2ம் தேதிக்கு பிறகு என்ன யுத்தம் நடக்கப்போகிறதோ எனத் தெரியாது.
இபிஎஸ் முதல்வராக்கி சாதித்தது அரசு ஊழியர்களின் ஓய்வூதிய வயதை 60 ஆக மாற்றியது. அரசின் கடன் காரணமாகவே இந்நிலை ஏற்பட்டுள்ளது.
இளைஞர்களின் வேலைவாய்ப்பு பாதிக்கிறது. இவர்கள் நடத்துவது அம்மா ஆட்சியில்லை. சும்மா ஆட்சி. மாநில, மத்திய அரசுகள் ஒதுப்போவது வேறு. மத்திய அரசு நிதி கொடுக்கிறது மாநில அரசு சொல்கிறது. அந்த பணம் நமது வரி பணம் தானே. மடியில் கனம் இருப்பதால் மத்திய அரசுக்கு ஆளுங்கட்சியினர் பயக்கிறார்கள்.
திமுக ஆட்சியில் இருந்து, மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்க அடிக்கல் நாட்டியிருந்தால் இந்நேரம் கட்டிமுடித்து திறக்கப்பட்டிருக்கும். தமிழக மருத்துவக் கல்லூரிகளில் 7.5 சதவீதம் சேர்க்கை கொண்டு வந்தோம் என்கிறார்கள், அதை நிலைக்கச் செய்ய முடியுமா.
69 சதவீத இட ஒதுக்கீடு திட்டத்தை கொண்டு வந்ததே நாங்கள். ஜெயலலிதா அதை நிலை நாட்டினார். மருத்துவக் கல்வியை தவிர்த்து, செவலியர் படிப்புக்கும் மத்திய அரசு நீட் தேர்வு கொண்டு வருகின்றது.
இது தான் பாஜகவின் கல்வி கொள்கையா? அவர்கள் கொண்டு வருவது தொலைநோக்கு திட்டம் அல்ல. தொல்லை நோக்கு திட்டம். இந்தியாவை மோடி ஒவ்வொரு பக்கமாக விற்கிறார். மக்கள் புரிந்து கொள்ளவேண்டும். சிபிஐ, வருமானவரித் துறை, அமலாக்கத்துறை போன்ற அச்சுறுத்தல் களுக்கு திமுக பயப்படாது என, ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக வேட்பாளர்களை ஆதரியுங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் காங்கிரஸ் மாவட்டத் தலைவர் கார்த்திகேயன், மதிமுக தொழிற்சங்க நிர்வாகி மகப்பூஜான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முன்னதாக அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:மே 2ஆம் தேதிக்கு பிறகு திமுக தலைவர் மு க ஸ்டாலின் முதல்வர் ஆவது உறுதி. தமிழகம் இதுவரை கண்டிராத ஒரு வெற்றியை திமுக கூட்டணி பெறும்.
அச்சுறுத்தல் காரணமாக தான் வருமான வரித்துறை மூலம் திமுக நிர்வாகிகள் மற்றும் வேட்பாளர்கள் வீடுகளில் சோதனை நடக்கிறது. இதன்மூலம் அச்சுறுத்தலாம் அரசியல் பழி வாங்கலாம் என்று நினைக்கிறார்கள்.
இது அவர்கள் எதிர்பார்த்த விளைவை இன்றி, எதிர் விளைவைத் தரும். அதிமுகவினர் முழுக்க பண நாதன் அருளை மட்டுமே நம்பியுள்ளனர்.
அதிமுக - பாஜக கூட்டணியை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயாராக உள்ளனர். பிரதமர் மோடியும் வடநாட்டு அமைச்சர்களும் தமிழகத்திற்கு பிரச்சாரத்திற்காக வரவர திமுகவின் வெற்றி என்பது உறுதியாகி கொண்டே போகிறது.
பொதுக்கூட்டம் நடத்துவதன் மூலம் திமுக என்னும் கட்சிக்கு நல்ல உரத்தினை இவர்கள் தருகிறார்கள். நல்ல விளைச்சல் கிடைக்கும் என்பது உறுதி, என்றார்.