

பாஜகவினர் விஷம் போன்றவர்கள். அவர்களை புதுச்சேரி மக்கள் அனுமதிக்கக்கூடாது என மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவரும், கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவருமான மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் புதுச்சேரி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் இன்று (ஏப் 1) மாலை செய்தியாளர்களிடம் கூறியதாவது:
‘‘புதுச்சேரி மக்கள் எப்போதும் காங்கிரஸூக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதால், இத்தேர்தலிலும் காங்கிரஸ் கூட்டணி வெற்றிக்கு துணை நிற்பார்கள். காங்கிரஸ் தலைவர்கள் ஏழை மக்களின் நலனுக்காகவும், சாதி, மதபேதமின்றி, அவர்களின் வளர்ச்சிகாகவும் பாடுபட்டனர்.
ஆனால் தற்போதுள்ள மத்திய பாஜக அரசு, மக்களிடையே சாதி, மதப்பிரிவினையை ஏற்படுத்துகிறது. தனி நபர் சுதந்திரத்தை பறித்து வருகிறது. தொடர்ந்து, ஜனநாயகத்துக்கு விரோதமாக ஆட்சிக் கலைப்பில் ஈடுபட்டு வருகிறது.
பல மாநிலங்களில் மத்திய பாஜக ஜனநாயக விரோதமாக செயல்பட்டு வரும் நிலையில், பிரதமர் மோடி ஜனநாயகத்தைப் பற்றி பேசுகிறார். புதுச்சேரியில் நேரடியாகவும், மறைமுகமாகவும் எம்எல்ஏக்களை இழுத்து, தேர்தலுக்கு 2 மாதங்களுக்கு முன்பே காங்கிரஸ் அரசை பாஜக கவிழ்த்துள்ளது.
இதே போல், கர்நாடகா, கோவா, மணிப்பூர், அருணாச்சல் பிரதேஷ், மத்தியபிரதேஷ் மாநிலங்களில் ஆட்சியை கவிழ்த்து, பாஜக ஆட்சியை திணித்துள்ளனர். எதிர்க்கட்சியே இருக்கக்கூடாது என்ற வகையில், பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் செயல்பட்டு வருகின்றனர்.
பிறகட்சிகள் ஆளும் மாநிலங்களில் திட்டங்களை செயல்படுத்தவிடுவதில்லை. ஏழை மக்கள், சிறு விவசாயிகளை பாதிக்கும் புதிய வேளாண் சட்டங்கள், தொழிலாளர் விரோத சட்டங்களை இயற்றியுள்ளதோடு, பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வால் மக்களை தவிக்கவிட்டுள்ளனர்.
பெட்ரோலிய பொருள் மூலம் ரூ.22 லட்சம் கோடி அளவில் வரி வசூலித்துள்ள மத்திய அரசு, அத்தொகையை என்ன செய்துள்ளது.
மத்திய பாஜக அரசு தொடர்ந்தால், ஜனநாயகத்தையும், அரசியல் சட்டத்தையும் அழித்துவிடுவார்கள். பாஜகவினர் விஷம் போன்றவர்கள், அவர்களை புதுச்சேரி மக்கள் அனுமதிக்கக் கூடாது.
மக்கள் சுந்திரமாக செயல்படவும், மாநிலங்களின் தனித்தன்மை காப்பதற்கும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை ஆதரிக்க வேண்டும்.
டெல்லியில் துணை நிலை ஆளுநருக்கே அனைத்து அதிகாரமும் உள்ளதாக, இப்போது புதிய சட்டத்தை இயற்றியுள்ளனர்.
மக்களால் தேர்ந்தெடுத்த அரசுக்கு அதிகாரமில்லை. பாஜகவால் விரைவில் புதுச்சேரிக்கும் இச்சட்டம் இயற்றப்பட்டு, ஜனநாயகம் முடிவுக்கு வந்துவிடும். காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்தைப் பெறுவோம் எனக்கூறியுள்ளதை நிறைவேற்ற மத்திய அரசிடம் வலியுறுத்துவோம். ’’இவ்வாறு அவர் கூறினார்.