புதுச்சேரியில் வேகமாகப் பரவும் கரோனா; ஒரே நாளில் 260 பேருக்குத் தொற்று: மேலும் ஒருவர் உயிரிழப்பு

புதுச்சேரியில் வேகமாகப் பரவும் கரோனா; ஒரே நாளில் 260 பேருக்குத் தொற்று: மேலும் ஒருவர் உயிரிழப்பு
Updated on
1 min read

புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் புதிதாக 260 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறைச் செயலர் அருண் இன்று (ஏப்.1) வெளியிட்டுள்ள தகவல்:

''புதுச்சேரி மாநிலத்தில் இன்று 2,355 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரி - 190, காரைக்கால் - 54, மாஹே - 16 பேர் என மொத்தம் 260 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

ஏனாமில் புதிதாக யாரும் தொற்றால் பாதிக்கப்படவில்லை. மேலும், முருங்கப்பாக்கம் காமராஜ் நகரைச் சேர்ந்த 72 வயது முதியவர் தொற்றால் பாதிக்கப்பட்டு, கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 683 ஆக உயர்ந்துள்ளது. இறப்பு விகிதம் 1.64 ஆக உள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 41 ஆயிரத்து 728 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது மருத்துவமனைகளில் 317 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 973 பேரும் என 1,290 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று 43 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். குணமடைந்தோர் எண்ணிக்கை 39 ஆயிரத்து 755 (95.27 சதவீதம்) ஆக உள்ளது.

இதுவரை 6 லட்சத்து 73 ஆயிரத்து 821 பரிசோதனைகள் செய்யப்பட்டதில், 6 லட்சத்து 22 ஆயிரத்து 708 பரிசோதனைகளுக்கு ‘நெகட்டிவ்’ என்று முடிவு வந்துள்ளது. சுகாதாரப் பணியாளர்கள் 27 ஆயிரத்து 236 பேர் (55 நாட்கள்), முன்களப் பணியாளர்கள் 13 ஆயிரத்து 352 பேர் (43 நாட்கள்), பொதுமக்கள் 31 ஆயிரத்து 567 பேர் (27 நாட்கள்) என மொத்தம் 72 ஆயிரத்து 155 பேருக்குக் கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது''.

இவ்வாறு சுகாதாரத் துறைச் செயலர் அருண் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு அக்டோபர் 22-ம் தேதி அதிகபட்சமாக 210 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதற்குப் பிறகு தொற்று பாதிப்பு படிப்படியாகக் குறையத் தொடங்கியது. இந்நிலையில், 5 மாதங்களுக்குப் பிறகு தற்போது கரோனா வேகமாகப் பரவி வருகிறது. இன்று ஒரே நாளில் 200 பேருக்கு மேல் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆகவே, தொற்றுப் பரவலைத் தடுக்க, பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in