

தனியார் தொழிற்சாலைகளில் உள்ளூர் இளைஞர்களுக்கு 75% வேலைவாய்ப்பு வழங்க சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என புதுச்சேரி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளது.
புதுச்சேரி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கை இன்று (மார்ச் 31) வெளியிடப்பட்டது. முதலியார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தேசியச் செயலாளர் நாராயணா தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். இதில் முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன், முன்னாள் எம்எல்ஏ நாரா.கலைநாதன், தட்டாஞ்சாவடி தொகுதி வேட்பாளர் சேதுசெல்வம் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:
‘‘உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை நடத்தி உள்ளாட்சி அமைப்புகளைச் சுதந்திரமாகச் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும். மூன்று பஞ்சாலைகளை மீண்டும் திறக்கவும், நவீன மயமாக்கவும், புதுச்சேரியில் ஜவுளிப் பூங்கா அமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
தகவல் தொழில்நுட்பப் பூங்கா உருவாக்கப்படும். நடுத்தரத் தொழிற்சாலைகள் அமைக்கப்படும். சிறு, குறு தொழில் வளர்ச்சிக்கு உரிய முன்னுரிமை அளிக்கப்படும். கூட்டுறவு அமைப்புகளுக்குத் தேர்தல் நடத்தப்படும். நலிந்த கூட்டுறவு நிறுவனங்கள் மீண்டும் இயங்க வழிவகை செய்யப்படும். அமைப்பு சாராத் தொழிலாளர்களுக்கு நலவாரியம் உடனடியாக வடிவம் பெற நடவடிக்கை எடுக்கப்படும்.
தொழிலாளர்களுக்குக் குறைந்தபட்சம் ரூ.18 ஆயிரம் ஊதியம் கிடைக்க வலியுறுத்தப்படும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவதில் தனிக் கவனம் செலுத்தப்படும். காலியாக உள்ள 10 ஆயிரம் அரசுப் பணியிடங்கள் நிரப்பப்படும். மாநில அரசுப் பணியிடங்களை நிரப்ப மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையம் அமைத்திட வலியுறுத்தப்படும்.
தனியார் தொழிற்சாலைகளில் உள்ளூர் இளைஞர்களுக்கு 75 சதவீத வேலைவாய்ப்பு வழங்க சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். வங்கி மற்றும் அரசு நிறுவனங்களில் மாணவர்கள் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்ய வலியுறுத்தப்படும். நீட் தேர்வில் இருந்து புதுச்சேரிக்கு விலக்கு அளிக்க வலியுறுத்தப்படும். கலை, அறிவியல் கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு என்ற மத்திய அரசின் அறிவிப்பு ரத்து செய்ய வலியுறுத்தப்படும்.
தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 50 சதவீத இடங்களை அரசுக்கு வழங்க வழிவகை செய்யும் சட்டம் இயற்றப்படும். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்வியில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் 25 சதவீத இடஒதுக்கீடு பெறப் பாடுபடுவோம்.
உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கவும், அரசுப் பணிகளில் 30 சதவீதம் பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கவும் வலியுறுத்துவோம். தாய்மொழியில் பயின்றவர்களுக்கு தமிழகத்தைப் போல் வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை வழங்கக் கோருவோம். மத்திய அரசுக் கல்வி நிறுவனங்களில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை அந்தந்த பிராந்திய மொழிகளைக் கட்டாயமாக்க வலியுறுத்துவோம். ஊழல் புரிந்தவர்கள் தப்பிக்காத வகையில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், அரசு அதிகாரிகள் மீது விசாரணை நடத்திட லோக் ஆயுக்தா கொண்டுவர வலியுறுத்துவோம்.
நிலத்தடி நீரையும், நீர் வளங்களையும் பாதுகாத்திடவும், ஆக்கிரமிப்பில் உள்ள நீர்நிலைகளைக் கண்டறிந்து ஆக்கிரமிப்புகளை அகற்றவும் முயற்சி மேற்கொள்ளப்படும். மகாத்மா காந்தி கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தின் வேலை நாள் 100-ல் இருந்து 200 ஆக உயர்த்த வலியுறுத்தப்படும்.’’
இவ்வாறு சிபிஐ தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.