

மதுரை மாவட்டத்தில் அமமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அமமுக பொதுச் செயலர் டிடிவி. தினகரன் நேற்று பிரச்சாரம் செய்தார்.
தொடர்ந்து 2-வது நாளாக இன்று மதுரை கிழக்குத் தொகுதி அமமுக வேட்பாளர் தங்க சரணவனுக்கு ஆதரவு திரட்டி, ஒத்தக்கடையில் பேசினார்.
அவர் பேசியாதவது:
இந்த வெயிலிலும் எழுச்சியுடன் இங்கு கூடியிருக்கும் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. அமமுக, தேமுதிக, ஓவைஸி, எஸ்டிபிஐ, மருதுசேனை சங்கம், அகில இந்திய முக்குலத்தோர், தமிழ்நாடு பார்வர்டு பிளாக் உள்ளிட்ட கட்சிகளின் மதுரை கிழக்குத் தொகுதி வெற்றி வேட்பாளர் தங்க.சரவணனுக்கு குக்கர் சின்னத்தில் வாக்களித்து, மாபெறும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யவேண்டும்.
இத்தேர்தல், அம்மாவின் உண்மைத் தொண்டர்களுக்கும், தமிழின துரோகிகளுக்கும் நடக்கும் தேர்தல். தீயசக்தி என, புரட்சித் தலைவரால் அடையாளம் காட்டிய திமுகவையும், துரோகிகளையும் முடிவுக்குக் கொண்டு வந்து, அம்மாவின் உண்மையான ஊழற்ற ஆட்சியை கொண்டு வர நீங்கள் வாக்களிக்கவேண்டிய வெற்றிச் சின்னம் குக்கர்.
வீட்டுக்கு ஒருவருக்கு வேலை வாய்ப்பு உருவாக்கித் தரவும், விவசாயிகள், நெசவாளர்கள், தொழிலாளர்கள், வியாபாரிகள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், மீனவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் நலன் பாதுகாத்திட, இளம் பெண்கள், இளைஞர்களுக்கு வேலை,புதிய தொழில் துவங்க மகளிர் குழுக்களுக்கு கடன் வழங்குதல் மற்றும் 60 வயது மேற்பட்ட விவசாயிகள், மீனவர்கள், நெசவாளர்கள், அமைப்புச் சாரா தொழிலாளர்களுக்கு முதியோர் உதவித்தொகையாக மாதம் ரூ. 2 ஆயிரம் வழங்க குக்கர் சின்னத்திற்கு நீங்கள் வாக்களிக்கவேண்டும்.
மதுரை கிழக்கு தொகுதிக்கு தேவையான மகளிர் கலைக் கல்லூரி, யானைமலை ஒத்தக்கடையில் புதிய தீயணைப்பு நிலையம், அரசு போக்குவரத்துக்கழக பணிமனை, பெரும்பிடுகு முத்திரைக்கு சிலை, சக்கிமங்கலம் பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு எஸ்டி சாதிச் சான்றிதழ் வழங்கப்படும்.
இக்கோரிக்கைகள் நிறைவேற்றிட சரவணனை வெற்றி பெறச் செய்யுங்கள். அம்மாவின் உருவத்தை தாங்கிய இந்த இயக்கம், அதிமுகவை மீட்டெடுக்கவும், தமிழகத்தில் அம்மாவின் உண்மையான ஆட்சியை கொண்டு வரவும் குக்கர் சின்னத்திற்கு வாக்களிக்கவேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
மேலூர் அமமுக வேட்பாளர் செல்வராஜூக்கு ஆதரவு கேட்டு, இன்று மாலை டிடிவி. தினகரன் பேசும்போது, ‘‘
கொட்டாம்பட்டி பகுதி கிராமங்கள் பயன் தரும் பெரியாறு கால்வாய் அமைக்கப்படும். கொட்டாம்பட்டி பகுதியில் தென்னை வாரியம் அமைத்து தென்னை சார்ந்த தொழிற்சாலைகள் உருவாக்கப்படும்.
சட்டத்திற்கு உட்பட்டு கிரானைட் குவாரிகளை அரசே நடத்திட நடவடிக்கை எடுக்கப்படும் .
சுதந்திரப் போராட்டத்தில் உயிர் நீத்த வெள்ளலூர் நாடு தியாகிகளுக்கு நினைவு தூண், நினைவு மண்டபம் கட்டப்படும். இப்பகுதி இளைஞர்கள், இளம் பெண்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்க வழிவகைகள் செய்யப்படும். மேலூரில் அரசு பெண்கள் கலைக்கல்லூரி உருவாக்கப்படும்,’’ என்றார்.