

புதுச்சேரியில் கரோனா தொற்றுக்கு மேலும் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், புதிதாக 115 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் ஆயிரத்தை கடந்துள்ளது.
இதுகுறித்து, புதுச்சேரி சுகாதாரத்துறை செயலாளர் அருண் இன்று (மார்ச் 30) வெளியிட்டுள்ள தகவல்:
"புதுச்சேரி மாநிலத்தில் 2,427 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில், புதுச்சேரி - 61, காரைக்கால் - 51, ஏனாம் - 2, மாஹே - 1 என மொத்தம் 115 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், புதுச்சேரி வெங்கட்டா நகரைச் சேர்ந்த 57 வயது ஆண் நபர் தொற்றால் பாதிக்கப்பட்டு கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 682 ஆக உயர்ந்துள்ளது. இறப்பு விகிதம் 1.65 சதவீதமாக உள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 41 ஆயிரத்து 341 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது ஜிப்மரில் 82 பேர், கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரியில் 139 பேர், காரைக்கால் 60, ஏனாம் 3 என மாநிலம் முழுவதும் மருத்துவமனைகளில் 284 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 727 பேரும் என 1,011 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதனால் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை மீண்டும் ஆயிரத்தை தாண்டியுள்ளது.
இன்று 94 பேர் வரை சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 39 ஆயிரத்து 648 (95.90 சதவீதம்) ஆக உள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் 6 லட்சத்து 69 ஆயிரத்து 262 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில், 6 லட்சத்து 19 ஆயிரத்து 231 பரிசோதனைகளுக்கு 'நெகட்டிவ்' என்று முடிவு வந்துள்ளது.
இதுவரை சுகாதார பணியாளர்கள் 25 ஆயிரத்து 213 (53 நாட்கள்), முன்களப் பணியாளர்கள் 10 ஆயிரத்து 711 (41), பொதுமக்கள் 28 ஆயிரத்து 927 பேர் (25 நாட்கள்) என, மொத்தம் 64 ஆயிரத்து 851 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது".
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.