

மோடியுடன் சேரும் எந்தக் கட்சியையும் மக்கள் ஏற்கமாட்டார்கள் என்று முத்தரசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் இன்று தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
"பாஜகவுடன் சேர்ந்ததால் தமிழகத்தில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாது என்று அதிமுகவுக்குத் தெரியும். எடப்பாடி பழனிசாமியின் பலவீனத்தைப் பயன்படுத்தி பாஜக சீட்டுகளை வாங்கிக் கொண்டது. இந்த நிலையில் காவிக் கொடியைப் பிடித்துச் சென்றாலோ, மோடியின் பெயரைக் கூறினாலோ மக்களிடம் பாஜகவால் ஓட்டு கேட்க முடிவதில்லை. ஆகவே, ஒரு கூட்டணி வைத்துகொண்டு அவர்கள் அடையாளங்கள் இல்லாமல் வாக்கு வாங்க முயல்கிறார்கள்.
தமிழக மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். மோடியுடன் சேரும் எந்தக் கட்சியையும் மக்கள் ஏற்கமாட்டார்கள். அதிமுகவுக்குப் போடும் ஓட்டு என்பது பாஜகவுக்குப் போடும் ஓட்டு என மக்கள் தெளிவாக இருக்கிறார்கள்.
அதிமுகவைப் பொறுத்தவரை அவர்கள் மக்கள் மீது நம்பிக்கை இழந்துவிட்டார்கள். இதன் காரணமாகவே ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்றைப் பேசுகிறார்கள். இரண்டு நாட்களாக எடப்பாடி பழனிசாமி சாபம் விடும் சாமியாராக மாறியிருக்கிறார்.
ஒரு வழியில் வருமான வரித்துறை சோதனை மூலம் குறுக்கு வழியைக் கையாள்கிறார்கள். இன்னொரு வழியில் பணம் கொடுத்து வாக்குகளைப் பெற நினைக்கிறார்கள். ஆனால், திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்குத்தான் ஓட்டு என்பதில் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள்".
இவ்வாறு முத்தரசன் தெரிவித்தார்.