

புதுச்சேரியில் முத்தியால்பேட்டை உள்ளிட்ட இடங்களில் எங்கள் வாக்கு விற்பனைக்கு அல்ல என்ற வாசகம் அடங்கிய பேனரை சில வீட்டு உரிமையாளர்கள் தங்களது வீட்டு வாசல்களில் வைத்து அசத்தியுள்ளனர்.
புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறுகிறது. தேர்தலில் 324 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். தேர்தலுக்கு இன்னும் ஒருவார காலமே உள்ள நிலையில் அரசியல் கட்சியினர் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். வேட்பாளர்கள் வீடு வீடாகச் சென்று வாக்கு கேட்டு வருகின்றனர்.
அதே நேரத்தில் ஆங்காங்கே வாக்காளர்களுக்குப் பணம், பரிசுப் பொருட்கள் வழங்குவதாகவம் தகவல் வெளியாகி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த தேர்தல் துறை தீவிரக் கண்காணிப்புப் பணிகளையும் மேற்கொண்டுள்ளது. பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கையிலும் தேர்தல் துறை ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில் புதுச்சேரி முத்தியால்பேட்டை, காமராஜ் நகர் உள்ளிட்ட இடங்களில் வசிக்கும் சில வாக்காளர்கள் தங்கள் வீட்டின் வாசல்களின் முன்பு வாக்குகள் விற்பனைக்கு அல்ல என்ற பேனர்களை வைத்துள்ளனர்.
அதில், ‘‘வாக்கு விற்பனைக்கு அல்ல. பணமோ, பொருளோ கொடுத்து வாக்கு கேட்பதும், பணம், பொருளுக்காக வாக்கை விற்பதும் தேசத் துரோகச் செயல்களே’’ என்ற வாசகம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, முத்தியால்பேட்டை முத்தையா முதலியார் வீதியில் வசிக்கும் சாம்சன் பால் உள்ளிட்ட சிலரிடம் கேட்டபோது, ‘‘தேர்தலில் வாக்கு அளிக்கக் கேட்டு வேட்பாளர்கள் பலரும் வீட்டுக்கு வந்து பணம் கொடுக்க முயல்கின்றனர். இதனைத் தவிர்ப்பதற்காவும், வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் வாக்குகள் விற்பனைக்கு அல்ல என்ற பேனரை வைத்துள்ளோம்.
எங்களுக்குப் பணம் முக்கியமல்ல. நல்ல வேட்பாளர்கள்தான் முக்கியம். இதனை நாங்கள் ஒவ்வொரு தேர்தலிலும் கடைப்பிடிக்கிறோம். எனவே, வாக்காளர்கள் பணம் வாங்காமல் வாக்களிக்க வேண்டும் என்பதே எங்களுடைய நோக்கம்’’ என்று தெரிவித்தனர்.