பெண்களை இழிவாகப் பேசுபவர்களைக் கண்டிக்கும் திராணியற்றவர் ஸ்டாலின்: திண்டுக்கல் லியோனியின் பேச்சு குறித்து முதல்வர் விமர்சனம்

பெண்களை இழிவாகப் பேசுபவர்களைக் கண்டிக்கும் திராணியற்றவர் ஸ்டாலின்: திண்டுக்கல் லியோனியின் பேச்சு குறித்து முதல்வர் விமர்சனம்
Updated on
1 min read

பெண்களைக் கண்டபடி இழிவாகவும், கொச்சைப்படுத்தியும் பேசிவரும் திண்டுக்கல் லியோனி போன்ற பேச்சாளர்களைக் கண்டிக்கும் திராணியில்லாத தலைவர் ஸ்டாலின் என முதல்வர் பழனிசாமி விமர்சித்தார்.

சமீபத்தில் தொண்டாமுத்தூரில் பேசிய திமுகவின் கொள்கை பரப்புச் செயலாளர் திண்டுக்கல் லியோனி, பெண்கள் பலூன் போல் ஊதி பெருத்துள்ளனர். முன்பெல்லாம் இடுப்பு 8 போல் இருக்கும் என்று பேசினார். அவரது பேச்சு சமூக வலைதளங்களில் வைரலானது. அவரது பேச்சுக்குப் பலரும் கண்டனம் தெரிவித்தனர். திமுக எம்.பி. கனிமொழியும் பொதுவாகக் கண்டனம் தெரிவித்தார்.

ஆ.ராசா பேச்சு பரபரப்பானதால் லியோனியின் பேச்சு மீதான பரபரப்பு அடங்கியிருந்தது. தனது பேச்சுக்கு ஆ.ராசா வருத்தம் தெரிவித்திருந்த நிலையில், தற்போது முதல்வர் பழனிசாமி லியோனியின் பேச்சைக் கண்டித்துள்ளார்.

சென்னையில் இன்று தேர்தல் பிரச்சாரத்தில் முதல்வர் பழனிசாமி பேசியதாவது:

“திண்டுக்கல் லியோனி திமுகவின் பேச்சாளர். அவர் கோவையில் பேசும்போது பெண்களைக் கொச்சைப்படுத்திப் பேசியுள்ளார். திமுக என்றாலே பெண்களுக்குக் கொடுமை இழைக்கக் கூடியவர்கள். அதுவும் தேர்தல் நேரத்தில் பெண்களைக் கொச்சைப்படுத்தி, கீழ்த்தரமான வார்த்தைகளால் லியோனி பேசுகிறார்.

நீங்கள் அத்தனை பேரும் ஊடகங்களிலும், பத்திரிகைகளிலும் பார்த்திருப்பீர்கள். பெண்களின் இடுப்பைச் சம்பந்தப்படுத்திப் பேசிய திண்டுக்கல் லியோனி போன்றவர்களுக்கு இந்தத் தேர்தல் மூலம் தகுந்த பாடத்தை நீங்கள் கற்பிக்க வேண்டும். இப்படி பெண்களைக் கொச்சைப்படுத்தி, கீழ்த்தரமாகப் பேசுகின்ற இத்தகைய பேச்சாளர்களையெல்லாம் தட்டிக்கேட்கத் திராணி இல்லாத தலைவர் ஸ்டாலின்.

நீங்கள் யோசித்துப் பாருங்கள். பெண்கள் எப்படி நடமாட முடியும்? ஆட்சி, அதிகாரத்தில் இல்லாதபோதே திமுகவைச் சேர்ந்தவர்கள் இப்படிப் பெண்களை அவமானப்படுத்திப் பேசுவது, கொச்சைப்படுத்திப் பேசுவது, கீழ்த்தரமான பேச்சு பேசுவது எல்லாம் மன்னிக்க முடியாத குற்றம்.

இப்படிப்பட்டவர்களுக்கு பெண்களும், வாக்காளர்களும் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்”.

இவ்வாறு முதல்வர் பழனிசாமி பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in