

பெண் இனத்தை இழிவாகப் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவுக்குத் தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என, அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரின் மகள் பிரியதர்ஷனி ஆவேசமாகப் பேசினார்.
திருமங்கலம் தொகுதியில் கண்டுகுளம், சாத்தங்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். அவருடன் அவரது மகள் யு.பிரியதர்ஷினியும் தந்தைக்கு ஆதரவு திரட்டினார்.
அப்போது அவர் பேசியதாவது:
''பெண்களைத் தெய்வமாக மதித்து, அவர்களுக்குப் பாதுகாப்பளிக்கும் கட்சி அதிமுக. பெண்களை இழிவாகத் தொடர்ந்து பேசும் திமுகவை இத்தேர்தலில் அடியோடு அழித்து, நீங்கள் போடும் ஓட்டுகளால் அட்ரஸ் இன்றி ஆக்கவேண்டும்.
முதல்வர் தெய்வமாக மதிக்கின்ற அவரது தாயாரை இழிவாகப் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவுக்குத் தகுந்த பாடம் புகட்டிடும் வகையில், தேர்தலில் மீண்டும் எடப்பாடியாரை முதல்வராக்கி அரியணையில் அமர்த்த வேண்டும். ஆ.ராசா, அவரது தலைவர் ஸ்டாலினை முகவரியின்றி ஆக்கிட வேண்டும்.
திமுகவைத் தலைமை தாங்கி நடத்தி வரும் ஸ்டாலினுக்கு நீங்கள் சரியான பாடம் புகட்ட வேண்டும். அதுமட்டுமின்றி நீங்கள் போடும் ஒவ்வொரு வாக்கும் பெண் சமுதாயத்தையும், பெண் சமுதாயத்தைப் பாதுகாக்கும் அரணாகத் திகழும். முதல்வரை ஆணவத்தின் உச்சகட்டமாகப் பேசிவரும் ஸ்டாலினுக்கும் ஆ.ராசாவுக்கும் பாடம் புகட்ட வேண்டும்''.
இவ்வாறு பிரியதர்ஷினி பேசினார்.