Last Updated : 27 Mar, 2021 03:15 AM

 

Published : 27 Mar 2021 03:15 AM
Last Updated : 27 Mar 2021 03:15 AM

வெயில் தாக்கத்தில் இருந்து கால்நடைகளை பாதுகாக்கும் வழிமுறைகள் என்ன? - திருப்பத்தூர் கால்நடை மருத்துவர் விளக்கம்

தமிழத்தில் கோடை வெயில் ஆரம்பமாகி மக்களை அச்சுறுத்தி வருகிறது. பொதுவாக ஏப்ரல், மே மாதங்களில் காணப்படும் வெயிலின் தாக்கம் இந்த ஆண்டு பிப்ரவரியிலேயே காண முடிகிறது. கோடை வெயில் மனிதர்களை மட்டுமல்ல கால்நடைகளையும் பெரிய அளவில் பாதிப்புக் குள்ளாக்கி வருகிறது.

பொதுவாக கோடை காலத்தில் கருப்பு மற்றும் கருப்பு-வெள்ளை நிறம் கொண்ட ஆடு மற்றும் மாடுகளை வெயில் காலத்தில் மேயச்சலுக்காக வெளியில் அனுப்பக் கூடாது. காரணம் கருப்பு, வெள்ளை நிற கால்நடைகள் சூரிய கதிர் வீச்சு களை அதிகமாக உள்வாங்கி கொள்ளும்.

கால்நடைகளுக்கு உடல் வெப்பநிலை அதிகரிக்கும், வழக்கத்தை காட்டிலும் மூச்சு அதிகமாக வாங்கும். வாயில் இருந்து எச்சில் அதிகமாக காணப்படும். உணவு உட்கொள் வதும் குறையும். வெயில் தாக்கத்தால் சில கால்நடைகள் உயிரிழந்து போகும் நிலையும் ஏற்படும். இது போன்ற பிரச்சினைகளில் இருந்தும், கோடை வெயிலில் இருந்தும் கால் நடைகளை பாதுகாப்பது எப்படி என்பது குறித்து திருப்பத்தூர் மாவட்டம், காக்கணாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த கால்நடை மருத்துவர் அன்புசெல்வம் என்பவர் ‘ இந்து தமிழ் திசை’ நாளிதழுக்காக கூறும்போது, ‘‘கோடை காலத்தில் மனிதர்களை மட்டும் அல்ல, கால்நடைகளையும் பாதுகாப்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். கோடைகாலத்தில் ஈக்கள் பெருக்கத்தை கட்டுப்படுத்த மருந்துகளை பயன்படுத்த வேண்டும்.

தினசரி கால்நடைகளை கட்டி வைக்கும் தொழுவத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும்.வெயில் அதிகமாக இருக்கும்போது கால்நடைகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச்செல்லக்கூடாது. தினசரி 4 முதல் 5 முறை சுத்தமான தண்ணீரை கால்நடைகளுக்கு கொடுக்க வேண்டும்.

கோடை காலங்களில் கால்நடைகளுக்கு அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் தீவனத்தை வைக்க வேண்டும். பால் உற்பத்தி மிகவும் முக்கியமானது என்பதால் பசுந்தீவனத்தை போதுமான அளவுக்கு வழங்க வேண்டும். கோடை காலத்தில் பசுந்தீவனம் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புண்டு. ஆகவே ‘ஊறுகாய் புல் பதப்படுத்துதல்’ (Silage), ‘அசோலா’ (Azolla) பயன்படுத்துதல், மண் இல்லாமல் தீவனம் வளர்ப்பு முறைகள் (Hydroponics) மூலம் கால்நடைகளை பசுந்தீவனம் பற்றாக்குறையில் இருந்து தற்காத்துக்கொள்ள முடியும்.

இந்த வழிமுறைகளை பின்பற்றினால் கோடை காலத்தில் பால் உற்பத்தியில் எந்த விதமான பாதிப்பும் ஏற்படாது. எனவே, கோடை காலத்தில் கால்நடை வளர்ப்போர், விவசாயிகள் மேற்கூறிய வழிமுறைகளை தவறாமல் பின்பற்றினால் கோடை வெயில் தாக்கத்தில் இருந்து கால்நடை களை தற்காத்துக்கொள்ள முடியும். பால் உற்பத்தியையும் அதிகரிக்க முடியும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x