

முகக்கவசம் அணியாததுதான் கரோனா பரவலுக்கு முக்கியக் காரணம் என்று தமிழக சுகாதாரத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சுகாதாரத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அதில் அவர் பேசியதாவது:
“முகக்கவசம் அணிவதை மக்கள் மறந்துவிட்டனர். முகக்கவசம் அணியாததே கரோனா பரவுவதற்குக் காரணம். அதிகாரிகள், போலீஸாரைப் பார்த்த பிறகு பொதுமக்கள் முகக்கவசம் அணிகிறார்கள். உங்களைச் சுற்றித்தான் கரோனா உள்ளது.
தமிழகத்தைப் பொறுத்தவரை உருமாற்றம் அடைந்த கரோனாவால் பாதிக்கப்பட்ட அனைவரும் குணமடைந்து சென்றுவிட்டனர். அவ்வாறு இருக்கையில் தற்போது அதிகரித்துள்ள கரோனா பரவலுக்கும் உருமாற்றம் அடைந்த கரோனாவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இந்தியாவிலேயே அதிகபட்சமாக ஆர்டி-பிசிஆர் டெஸ்ட் அதிக அளவில் தமிழகத்தில்தான் நடத்தப்படுகிறது. மார்ச் முதல் வாரத்தில் 52 ஆயிரமாக இருந்த சோதனை எண்ணிக்கை, தற்போது 85 ஆயிரமாக மாறியுள்ளது.
அவ்வாறு இருக்கையில் வரும் நாட்களில் தொற்று எண்ணிக்கை அதிகரிக்கத்தான் செய்யும். மருத்துவப் பரிசோதனைகள் 1 லட்சத்தை நெருங்கும்போது ஒரு நாளைக்கு 2,000 பேர் கூட கரோனாவால் பாதிக்கப்படலாம்”.
இவ்வாறு ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.