

கரூரில் ஜவுளி உற்பத்தி, ஏற்றுமதி மற்றும் நிதி நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், நிதி நிறுவன வளாகத்திற்கு சீல் வைக்கப்பட்டது. இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.5 கோடி பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
கரூரில் செயல்படும் நிதி நிறுவனங்களில் கடந்த சில நாட்களில் அதிகளவில் பண பரிமாற்றம் நடைபெற்றுள்ளதாக கிடைத்த தகவல் அடிப்படையில் கரூர் நகரில் உள்ள நிதி நிறுவனங்கள் அவற்றுடன் தொடர்புடைய ஜவுளி உற்பத்தி, ஏற்றுமதி நிறுவனங்கள் என கரூரில் 6 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நேற்று (மார்ச் 25) நடைபெற்றது.
சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட இடங்களை சேர்ந்த வருமான வரித்துறை அலுவலர்கள் கரூர் செங்குந்தபுரம், ராம் நகர் ஆகிய இடங்களில உள்ள ஜவுளி உற்பத்தி, ஏற்றுமதி நிறுவனங்கள், கரூர் 80 அடி சாலையில் உள்ள நிதி நிறுவனங்கள், அவற்றின் உரிமையாளர்கள் வீடுகள் என 6 இடங்களில் சோதனை நடத்தினர்.
கரூரில் உள்ள 4-5 நிதி நிறுவனங்களில் கடந்த 10 நாட்களில் ரூ.250 கோடி பண பரிமாற்றம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. தேர்தலில் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக இத்தகைய பரிமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டதா என, இது தொடர்பான ஆவணங்களை வருமான வரித்துறையினர் சோதனையிட்டனர். மேலும், இது தொடர்பாக, ஆவணங்கள், கணக்கில் வராத ரூ.5 கோடி வருமான வரித்துறையால் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
நேற்றிரவு 12.30 மணி வரை சோதனை நடைபெற்ற நிலையில், 80 அடி சாலையில் உள்ள ஒரே கட்டிடத்தில் 5 நிதி நிறுவனங்கள் உள்ள வளாகத்திற்கு வருமான வரித்துறையினர் நேற்றிரவு சீல் வைத்தனர். இது தவிர, மேலும் ஒரு சில இடங்களில் தொடர்ந்து 2-வது நாளாக இன்று (மார்ச் 26) சோதனை நடைபெற்று வருகிறது.
தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் கரூரில் நிதி நிறுவனங்கள், ஜவுளி உற்பத்தி, ஏற்றுமதி நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருவதும், நிதி நிறுவனங்கள் செயல்பட்ட வளாகத்திற்கு சீல் வைத்ததும், பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.