

மதுரை தெற்கு தொகுதி மதிமுக வேட்பாளர் பூமிநாதனை 27 வகை சீர்வரிசை பொருட்களுடன் வர வேற்ற காட்சி பலரையும் வியப்பில் ஆழ்த்தியது.
மதுரை தெற்கு தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் மதிமுக வேட்பாளர் புதூர் பூமிநாதன் உதயசூரியன் சின்னத்தில் போட் டியிடுகிறார். இவர் தொகுதி முழு வதும் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். மதிச்சியம் பகுதியில் பிரச்சாரத்துக்குச் சென்றபோது அப் பகுதி வாக்காளர்கள், பெண்கள் திரண்டு பல்வேறு சீர்வரிசைப் பொருட்களுடன் வரவேற்றனர்.
ஆடு, மாடு, கோழி, அரிசி, பருப்பு, பழங்கள், மளிகைப் பொருட்கள் என சுமார் 27 வகையான பொருட் களுடன் பூரண கும்ப மரியாதை அளித்து மலர் தூவி வரவேற்றனர்.
சீர்வரிசைப் பொருட்களுடன் வேட்பாளரை வரவேற்ற காட்சியைப் பார்த்துப் பலரும் வியப்படைந்தனர். வரவேற்புக்குப் பின் வேட்பாளர் பூமிநாதன், பொதுமக்களிடம் ஆதரவு திரட்டினார்.
இது பற்றி திமுகவைச் சேர்ந்த தொகுதி தேர்தல் பொறுப்பாளர் வேல் முருகன் மற்றும் அப்பகுதியினர் கூறியது:
கிராமப்புறங்களில் தங்கள் வீட்டு மகளை திருமணம் முடித்து கொடுக்கும்போது மருமகனுக்கு சீர்வரிசை கொடுப்பது வழக்கம்.
அது போன்று எங்கள் தொகு தியை மகளாகவும், இங்கு வாக்குக் கேட்டு வந்த வேட்பாளர் பூமிநாதனை மருமகனாகவும் நினைத்து இந்த 27 வகையான சீர்வரிசைப் பொருட்களுடன் அவரை வரவேற்றோம். அவர் வெற்றி பெற்று எங்களது தெற்குத் தொகுதியான `செல்ல மகளை' செல்வச்செழிப்புடன் வாழவைப்பார் என்ற நம்பிக்கை எங்களுக்கு ஏற் பட்டுள்ளது, என்றனர்.
முன்னதாக பிரச்சாரத்தை மாநகர் வடக்கு மாவட்ட திமுக பொறுப்புக் குழுத் தலைவர் பொன். முத்துராமலிங்கம் தொடங்கி வைத்தார்.
பொறுப்புக்குழு உறுப்பினர்கள் பொன்.சேது, முகேஷ் சர்மா, ராமலிங்கம், 35-வது வட்ட செய லாளர் ரமேஷ் உள்ளிட்டோர் பங் கேற்றனர்.