அதிமுக வேட்பாளருக்கு ஓட்டுப்போட்டால் வீடு தேடிவந்து உதவுவார்; திமுக வேட்பாளர் வீடு தேடிவந்து அடிப்பார்- முதல்வர் பேச்சு

அதிமுக வேட்பாளருக்கு ஓட்டுப்போட்டால் வீடு தேடிவந்து உதவுவார்; திமுக வேட்பாளர் வீடு தேடிவந்து அடிப்பார்- முதல்வர் பேச்சு
Updated on
1 min read

அதிமுக வேட்பாளருக்கு ஓட்டுப் போட்டால் வீடு தேடி வந்து உதவுவார். திமுக வேட்பாளர்களுக்கு வாக்களித்தால் வீடு தேடி வந்து அடிப்பார்கள் என்று மதுரையில் நடந்த பிரச்சாரத்தில் முதல்வர் கே.பழனிசாமி தெரிவித்தார்.

மதுரை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதியில் போட்டியிடும் அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் கே.பழனிசாமி ஒத்தக்கடை, மேலூரில் இன்று (மார்ச் 25) பிரச்சாரம் செய்தார்.

அப்போது அவர் பேசியதாவது;

’’கடந்த 10 ஆண்டு அதிமுக ஆட்சியில் மக்கள் நிம்மதியாக மகிழ்ச்சியாக வாழுகிறார்கள். மத, சாதிச் சண்டைகள் கிடையாது. வியாபாரிகள் மகிழ்ச்சியாக, சுதந்திரமாக வியாபாரம் செய்கின்றனர். ஆனால், திமுக ஆட்சிக்கு வந்தால் நோட்டை எடுத்துக் கொண்டு வசூல் செய்ய வந்துவிடுவார்கள். அவர்கள் கேட்கிற பணத்தைக் கொடுக்காவிட்டால் கடையை அடித்து நொறுக்குவார்கள்.

அப்படித்தான் சென்னையில் வயிறு முட்ட புரோட்டா சாப்பிட்டுவிட்டு அதற்குப் பணம் கேட்ட ஹோட்டல் முதலாளி மூக்கை உடைத்தார்கள். கடையை அடித்து நொறுக்கினார்கள். திமுக தலைவர் ஸ்டாலின் கட்சிக்காரர்கள்மீது நடவடிக்கை எடுப்பதைவிட்டு, அவர்களைக் காப்பாற்ற கட்டப் பஞ்சாயத்து செய்கிறார். இவர்கள் ஆட்சிக்கு வந்தால் மீண்டும் கட்டப் பஞ்சாயத்து, ரவுடியிசம் நடக்கும்.

கடந்த திமுக ஆட்சியில் அப்பாவி மக்களை ஏமாற்றி பட்டா போட்டு விற்ற 14 ஆயிரம் ஏக்கர் நிலத்தை ஜெயலலிதா அக்கட்சியினரிடம் இருந்து மீட்டு உரியவர்களுக்கு வழங்கினார். முன்பெல்லாம் திமுகவினர் மக்கள் இடத்தைதான் பட்டாப் போட்டு விற்றார்கள். இனி ஆட்சிக்கு வந்தால் நாட்டையே பட்டா போட்டு விற்றுவிடுவார்கள். உதயநிதி ஸ்டாலின், அடுத்து நாங்கள்தான் ஆட்சிக்கு வருவோம் என்று அதிகாரிகளை பகிரங்கமாக மிரட்டுகிறார். ஆட்சியில் இல்லாமலே அதிகாரிகளையே இப்படி மிரட்டுகிறார்கள் என்றால், இவர்கள் ஆட்சிக்கு வந்தால் கிராமங்களில் வசிக்கும் நம்மைப் போன்ற விவசாயிகளும், அப்பாவி மக்களும் எப்படி நிம்மதியாக வாழ முடியும்.

அதிமுக வேட்பாளர்கள் அமைதியானவர்கள். எளிமையானவர்கள். அவர்களுக்கு நீங்கள் ஓட்டுப் போட்டு தேர்வு செய்தால், அவர்கள் வீடு தேடி வந்து உதவி செய்வார்கள். ஆனால், திமுக வேட்பாளர்களுக்கு ஓட்டுப்போட்டால் வீடு தேடி வந்து அடிப்பார்கள். அதற்கு உதாரணமாக மதுரை கிழக்கு தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளரைச் சொல்லலாம்’’.

இவ்வாறு முதல்வர் பழனிசாமி பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in