

புதுடெல்லியில் மறைந்த குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் தங்கியிருந்த இல்லத்தை அறிவுசார் மையமாக மாற்றாததால், அவரது அண்ணன் மகன் காஜா செய்யது இப்ராஹிம் பாஜகவிலிருந்து இன்று விலகினார்.
மறைந்த குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமின் மூத்த சகோதரர் முஸ்தபா கமால். இவரது மகன் காஜா செய்யது இப்ராஹிம் (47) பொறியாளரான இவர் கடந்த 21.07.2012 அன்று அன்றைய மாநில தலைவரும், தற்போதைய மத்திய அமைச்சருமான பொன். ராதாகிருஷ்ணன் தலைமையில் பாஜகவில் இணைந்தார். பின்னர் இவருக்கு தமிழக பாஜகவின் சிறுபான்மையினர் பிரிவு மாநில துணைத் தலைவராக பதவி அளிக்கப்பட்டது. மேலும் கடந்த நாடாளுமன்ற மற்றும் தமிழக சட்டசபை இடைத் தேர்தல்களிலும் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், கட்சியிலிருந்து விலகுவதாக, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு காஜா செய்யது இப்ராஹிம் திங்கள் கிழமை கடிதம் அனுப்பியுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
''கடந்த ஜுலை மாதம் 27 அன்று எனது சித்தப்பாவும் முன்னாள் குடியரசுத் தலைவருமான டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் (84) ஷில்லாங்கில் உள்ள ஐ.ஐ.எம் கல்வி நிறுவனத்தில் மாணவர்கள் மத்தியில் பேசிக் கொண்டிருக்கும் போதே மாரடைப்பால் காலமானார்.
இதனை தொடர்ந்து டெல்லியில் கலாம் வாழ்ந்த வீட்டை தேசிய அறிவுசார் மையமாக அமைக்க வேண்டும் என்பது எனது குடும்பத்தினர் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்திய மக்களின் கோரிக்கையாக இருந்தது. இந்த அறிவுசார் மையத்தின் மூலம் அப்துல் கலாமின் தொலை நோக்குள்ள பார்வைகளை நமது மாணவர்களும், இளைஞர்களும் கற்றுக் கொள்ள முடியும் என்பது தான் இதன் முக்கிய கருவாக இருந்தது. ஆனால், கலாம் வாழ்ந்த வீட்டை மத்திய அமைச்சல் மகேஷ் சர்மாவிற்கு ஒதுக்கப்பட்டு அவர் தற்போது வசித்து வருகிறார்.
ஒட்டு மொத்த இந்திய மக்களின் கோரிக்கையை, நான் மக்கள் பணியாற்றுவதற்காக அங்கம் வகித்து கடமையாற்றி வரும் மத்தியில் ஆளும் பாஜக அரசு நிறைவேற்றத் தவறிவிட்டது. ஆகவே, மாணவர்கள், இளைய சமுதாயம், பொதுமக்கள் அப்துல் கலாம் மீது மட்டற்ற பாசம் வைத்துள்ளவர்களின் வேண்டுகோளுக்கிணங்க பாஜகவின் பொறுப்பிலிருந்தும் அதன் அடிப்படை உறுப்பினர் என்ற நிலையிலிருந்தும் விலகுகிறேன்.
நமது நாட்டிற்கும், மாணவர்களுக்கும், இளம் விஞ்ஞானிகளுக்கும் புத்துணர்ச்சி கிடைக்கக்கூடிய அளவில் எனது சிறிய தந்தையார் அப்துல் கலாம் அவர்கள் காட்டி தந்த வழியில் எனது பயணமும், செயற்பாடும் பொது வாழ்வில் தொடர்ந்து பயணிக்கும்'' என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.