ஓட்டப்பிடாரம் தொகுதியில் திமுக - அதிமுக புதிய தமிழகம் இடையே கடும் போட்டி

ஓட்டப்பிடாரம் தொகுதியில் திமுக - அதிமுக புதிய தமிழகம் இடையே கடும் போட்டி
Updated on
2 min read

கடந்த 1962-ம் ஆண்டு முதல் இதுவரை ஓட்டப்பிடாரம் தொகுதி 14 சட்டப்பேரவை தேர்தல்களை சந்தித்துள்ளது. இதுவரை காங்கிரஸ் 3 முறையும், அதிமுக 4 முறையும், திமுக 2 முறையும் வென்றுள்ளன. அதேபோல் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி 2 முறைஇத்தொகுதியில் வெற்றிபெற்றுள்ளார். சுதந்திராகட்சி, இந்திய கம்யூனிஸ்ட், பார்வர்டு பிளாக்ஆகியவை தலா ஒருமுறை வெற்றி பெற்றுள்ளன.

மருத்துவர்கள் இல்லை

ஓட்டப்பிடாரம் தொகுதி மாவட்டத்தின் மிகவும் பின்தங்கிய பகுதி. மானாவாரி விவசாயம், கூலித் தொழிலாளர்களை அதிகம் கொண்ட தொகுதி. ஓட்டப்பிடாரத்தில் தாலுகா தலைமை மருத்துவமனை இருந்தாலும், 24 மணிநேர மருத்துவர் இல்லை. இதனால் அவசர காலத்துக்கு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தான் செல்ல வேண்டும். ஆம்புலன்ஸ் வசதியும் கிடையாது. ஏற்கெனவே நடத்தப்பட்டு வந்த குடும்ப கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சையும் ஓட்டநத்தம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு மாற்றப்பட்டு விட்டது.

விவசாயத்தை தவிர்த்து, இத்தொகுதி மக்களுக்கு வேலை அளிப்பது புதியம்புத்தூரில் உள்ள ஆயத்த ஆடை நிறுவனங்கள் தான். அதேபோல், அனல்மின் நிலையம், ஸ்பிக் நிறுவனம் உள்ளிட்ட பெரிய நிறுவனங்களும் இந்த தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் உள்ளன.

வேட்பாளர்களின் சாதகம்

திமுக சார்பில் தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சி.சண்முகையா, அதிமுக சார்பில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் பெ.மோகன், புதிய தமிழகம் கட்சி சார்பில் க.கிருஷ்ணசாமி உள்ளிட்ட 17 பேர் இத்தேர்தலில் களத்தில் உள்ளனர்.

திமுக வேட்பாளர் எம்.சி.சண்முகையா தனது சட்டப்பேரவை தொகுதி நிதியை பயன்படுத்தி பள்ளிகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரம், சில கிராமங்களில் சமுதாய நலக்கூடம், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளிட்ட பணிகளை செய்து கொடுத்துள்ளார். விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ், இடதுசாரிகள், மதிமுக கூட்டணி அவருக்கு பலத்தை கொடுக்கும்.

அதிமுக வேட்பாளர் பெ.மோகன் கடந்த2006 முதல் 2011-ம் ஆண்டு வரை சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தவர். கடந்த 2019 இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றிவாய்ப்பை இழந்தார். அதிமுக அரசின் நலத்திட்டங்கள் மற்றும் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள வாக்குறுதிகள் நிச்சயம் தனக்கு உதவும் என, அதை தெரிவித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

இத்தொகுதியில் கடந்த 1996-ம் ஆண்டு தேர்தலில் தனித்து போட்டியிட்டு புதிய தமிழகம்கட்சி தலைவர் கிருஷ்ணசாமி வெற்றி பெற்றார். அதனைத் தொடர்ந்து அதிமுக, திமுகஎன மாறி மாறி கூட்டணியில் போட்டியிட்டுள்ளார். தற்போது தனியாக களம் காண்கிறார்.

ஏற்கெனவே 2 முறை வெற்றி பெற்று எம்எல்ஏவாக இருந்தபோது, ஓட்டப் பிடாரம் தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களுக்கு தாமிரபரணி குடிநீரை கொண்டு வந்தது, மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்கு மஞ்சள்நீர் கால்வாயில் இருந்து குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுத்தது, தருவைகுளம் கடற்கரையில் தூண்டில் பாலம் அமைத்து கொடுத்தது போன்றவை அவருக்கு பலமாக உள்ளது. திமுக, அதிமுக, புதிய தமிழகம் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in