

கோவை ஆட்சியர், காவல் ஆணையரை மாற்றிவிட்டு வேறு அதிகாரிகளை நியமிக்கவும், அந்த அதிகாரிகள் பெயரைக் குறிப்பிட்டு தேர்தல் ஆணையம் தமிழக தலைமைச் செயலருக்கு அளித்த உத்தரவின் பேரில் இருவரும் மாற்றப்பட்டு புதிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கோவை மாவட்ட ஆட்சியராகப் பதவி வகிக்கும் ராசாமணி, காவல் ஆணையராகப் பதவி வகிக்கும் சுமித் சரண் ஆகிய இருவரையும் மாற்ற வேண்டும் என எதிர்க்கட்சியினர் தொடர்ந்து தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்து வந்தனர். இந்நிலையில் இன்று மதியம் தேர்தல் ஆணையம் புதிய உத்தரவைத் தலைமைச் செயலருக்கு அனுப்பியது.
தேர்தல் ஆணையச் செயலர் மலய் மாலிக், தலைமைச் செயலர் ராஜீவ் ரஞ்சனுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “பல்வேறு தரப்பிலிருந்து வந்த தகவல்களை அடுத்து தேர்தல் ஆணையம் கீழ்க்கண்ட உத்தரவைப் பிறப்பிக்கிறது. கோவை ஆட்சியர் ராசாமணி, காவல் ஆணையர் இருவரும் உடனடியாக மாற்றப்பட்டு தேர்தல் பணி அல்லாத பதவியில் அமர்த்தப்படவேண்டும்.
அவர்களுக்கு பதிலாக கோவை ஆட்சியராக நாகராஜை நியமிக்கவும், கோவை காவல் ஆணையராக ஏடிஜிபி டேவிட்சன் தேவாசிர்வாதத்தை நியமிக்க வேண்டும்’’ என்றும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி கோவை ஆட்சியர் சுமித் சரண் மாற்றப்பட்டு டேவிட்சன் தேவாசிர்வாதம் காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆட்சியர் ராசாமணி மாற்றப்பட்டு நாகராஜ் நியமிக்கப்படுகிறார்.
இதேபோன்று தேர்தல் செலவீனப் பார்வையாளராக சீருடைப் பணியாளர் தேர்வாணைய ஐஜியாக பணியாற்றும் தீபக் தாமோரை நியமிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.