

புதுச்சேரியில் 133 நாட்களுக்குப் பிறகு ஒரே நாளில் புதிதாக 126 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை 679 ஆக உயர்ந்துள்ளது.
புதுச்சேரியில் கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் கரோனா பாதிப்பு வெகுவாக குறைந்திருந்தது. ஆனால், கடந்த ஒரு வாரமாகத் தொற்றுப் பரவல் அதிகரித்து வருகிறது. இதற்கிடையில், கடந்த நவ.11-ம் தேதி ஒரே நாளில் 114 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதன்பிறகு நூற்றுக்கும் குறைவான நபர்களே தினமும் பாதிக்கப்பட்டு வந்தனர். 133 நாட்களுக்கு பிறகு இன்று ஒரே நாளில் 100 பேருக்கு மேல் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், காரைக்காலைச் சேர்ந்த 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுகுறித்துப் புதுச்சேரி சுகாதாரத்துறைச் செயலர் அருண் இன்று (மார்ச் 24) வெளியிட்டுள்ள தகவல்:
‘‘புதுச்சேரி மாநிலத்தில் 2,124 பேருக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரி - 87, காரைக்கால் - 32, ஏனாம் - 6, மாகே - 1 என மொத்தம் 126 பேருக்குக் கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும், காரைக்கால் நல்லம்பாள் பகுதியை சேர்ந்த 80 வயது முதியவர், காரைக்கால் கோட்டுச்சேரியை சேர்ந்த 73 வயது மூதாட்டி ஆகிய இருவரும் தொற்றால் பாதிக்கப்பட்டு காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 679 ஆக உயர்ந்துள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 40 ஆயிரத்து 645 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது புதுச்சேரி ஜிப்மரில் 61 பேரும், இந்திரா காந்தி அரசு மருத்துவ கல்லூரியில் 123 பேர் என 184 பேரும், காரைக்காலில் 40 பேரும், மாஹேவில் 2 பேரும் என 226 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாநிலம் முழுவதும் வீடுகளில் 360 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதன் மூலம் மொத்தம் 586 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று 17 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 39 ஆயிரத்து 380 ஆக உள்ளது.
இதுவரை 6 லட்சத்து 57 ஆயிரத்து 413 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. இதில் 6 லட்சத்து 10 ஆயிரத்து 55 பரிசோதனைகள் ‘நெகடிவ்’ என்று முடிவு வந்துள்ளது. சுகாதார பணியாளர்கள் 21 ஆயிரத்து 688 பேர் (48 நாட்கள்), முன்களப் பணியாளர்கள் 7 ஆயிரத்து 997 பேர் (36 நாட்கள்), பொதுமக்கள் 20 ஆயிரத்து 580 பேர் (20 நாட்கள்) என மொத்தம் 50 ஆயிரத்து 265 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.’’
இவ்வாறு சுகாதாரத்துறைச் செயலர் அருண் தெரிவித்துள்ளார்.