

சென்னை/மலப்புரம்: கேரள மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்த கே.எஸ்.முகமது ரபி மற்றும் அவரது மனைவி சி.பி. உம்முஷஹானமோல் ஆகிய தம்பதி, முதல்வர் விஜய்யைக் காண 650 கி.மீ. நடைபயணம் தொடங்கியுள்ளனர்.
தமிழக முதல்வராக விஜய் நேற்று பதவியேற்றார். இந்த நிகழ்வைக் கொண்டாடும் வகையில் கடந்த வியாழக்கிழமை கேரள தம்பதியினர் பயணத்தைத் தொடங்கினர்.
கையில் சிறிய பைகள் மற்றும் தங்குவதற்குத் தேவையான கூடாரங்களுடன் புறப்பட்ட இந்தத் தம்பதி, கடும் வெயில், திடீர் மழை என மாறி மாறி வந்த வானிலைச் சவால்களைப் பொருட்படுத்தாமல் சென்னை நோக்கித் தங்களது பயணத்தைத் தொடர்ந்தனர். பாலக்காடு வழியாகத் தமிழக எல்லைக்குள் நுழைந்த இவர்கள், வழியெங்கும் கூடாரங்களை அமைத்து ஓய்வெடுத்துக் கொண்டு முன்னேறினர்.
தங்களது இந்தப் பயணத்தை தினசரி வீடியோக்களாக சமூக வலைதளங்களில் பதிவேற்றி வந்தனர். வழியில் தங்களுக்கு முன்பின் தெரியாத மக்கள் அளித்த ஆதரவும் உபசரிப்பும் தங்களை நெகிழ வைத்ததாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
திரையுலகைக் கடந்து, மக்கள் சேவையில் ஈடுபட்டுத் தற்போது தேர்தலில் வெற்றி பெற்றுள்ள விஜய்யின் மீதான தீராத பற்றுதான் தங்களை இந்தச் செயலில் ஈடுபட வைத்ததாக அந்தத் தம்பதி உற்சாகத்துடன் தெரிவித்தனர்.
சென்னை வந்ததும் முதல்வரைச் சந்திக்க இவர்களிடம் முன் அனுமதி இல்லை. இருப்பினும், தங்களது இந்த அர்ப்பணிப்பு மிக்க முயற்சியைக் கண்டு நிச்சயம் தங்களுக்குச் சந்திக்க வாய்ப்பு கிடைக்கும் என்பதில் நம்பிக்கையுடன் உள்ளனர்.
வழியில் இவர்களைச் சந்திக்கும் பொதுமக்கள் பலரும் உணவு, தங்குமிடம் மற்றும் நிதி உதவிகளை வழங்கி ஊக்கப்படுத்தி வருகின்றனர். அரசியல் கடந்து, ஒரு தலைவன் மீது தொண்டர்கள் வைத்துள்ள தனிப்பட்ட அன்பிற்கும், விசுவாசத்திற்கும் சான்றாக இந்த 650 கி.மீ நடைபயணம் அமைந்துள்ளது.