

தமிழர்களின் பாரம்பரிய கலைகளை பாதுகாப்பதற்காகவும், அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துச் செல்லவும் கருமத்தம்பட்டியைச் சேர்ந்த ‘சங்கமம் கலைக் குழு’ அமைப்பினர் இந்த கலைகளை மக்களுக்கு இலவசமாக கற்றுக் கொடுத்து வருகின்றனர்.
கோவை அருகே உள்ள கருமத்தம்பட்டியில் அரசுப் பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர்கள், தன்னார்வ அமைப்பினர், பாரம்பரிய கலை பயிற்றுநர்கள் உள்ளிட்ட 20 பேர் அடங்கிய ‘சங்கமம் கலைக் குழு’ செயல்பட்டு வருகிறது. இந்த கலைக் குழுவில் உள்ளவர்கள் கடந்த 7 ஆண்டுகளாக கிராமங்களுக்குச் சென்று கரகாட்டம், காவடி ஆட்டம், ஒயிலாட்டம், சிலம்பாட்டம், தப்பாட்டம், ஜமாப் இசை ஆகியவற்றைக் கற்றுக் கொடுத்து வருகின்றனர்.
கருமத்தம்பட்டியில் சென்னியாண்டவர் கோயில் திடலில் கடந்த 2 மாதங்களாக இந்த கலைகளை கற்றுத் தருகின்றனர். இதில், 4 வயது சிறுவன் முதல் 65 வயது முதியவர் வரை பாரம்பரிய கலைகளை இலவசமாகக் கற்று வருகின்றனர். இவர்களுக்கு காவடி ஆட்ட கலைஞர் மனோகர் தினமும் 2 மணி நேரம் பயிற்சி அளித்து வருகிறார்.
இப் பயிற்சியில் 50 பேர் பயிற்சி பெறுகின்றனர். நடனமாடிக் கொண்டே தரையில் கிடக்கும் பணம், குண்டூசி ஆகியவற்றை கண், வாயில் எடுப்பது, 10 அடி உயர ஏணியில் நின்று காவடியை சுமந்தபடி ஆடுவது ஆகிய பயிற்சிகள் தற்போது வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த பயிற்சியில் ஈடுபட்டுள்ள கருமத்தம்பட்டியைச் சேர்ந்த 4 வயது சிறுவன் சித்தேஷ் கூறும்போது, ‘காவடி ஆட்டத்தை பார்ப்பதற்காக எனது அப்பாவுடன் இங்கு வந்தேன். இந்த ஆட்டத்தை கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆசை வந்தது. கடந்த 2 மாதங்களாக பயிற்சி பெற்று வருகிறேன். ஆடும்போது சந்தோஷமாக இருக்கிறது’ என்றார்.
காவடி ஆட்டத்தை புதிதாக கற்று வரும் தர்மராஜ் (55) கூறும்போது, ‘என்னைப் போன்றவர்களுக்கு உடல் உழைப்பு குறைந்து பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இந்நிலையில், காவடி ஆட்டத்தை இலவசமாக கற்றுக் கொள்ளலாம் என வந்தேன்.
பயிற்சியில் கலந்து கொண்ட பின்னர் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் மாற்றம் ஏற்படுவதை உணர முடிகிறது. பயிற்சியை நன்கு முடித்து அடுத்த தலைமுறையினருக்கு கற்றுத் தருவேன்’ என்றார்.
இது குறித்து சங்கமம் கலைக் குழுவின் பயிற்றுநர்களில் ஒருவரான மனோகர் கூறும்போது, ‘தமிழர்களின் பாரம்பரிய கலைகளை பாதுகாக்கும் பொருட்டும், கிராமம் கிராமமாக எடுத்துச் செல்வதற்காகவும் இந்த கலைக் குழுவை 7 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கினோம். காவடி ஆட்டத்தை கற்றுத் தரும் பொறுப்பை எடுத்துள்ளேன். என்னைப் போன்று மற்ற கலைகளை கற்றுத் தரும் சிறந்த பயிற்றுநர்கள் உள்ளனர். எங்கள் ஒவ்வொருவருக்கும் 30 ஆண்டு அனுபவம் உள்ளது.
தற்போதுள்ள கலாச்சார முறைகளால் பாரம்பரிய கலை அழிந்துவிடக் கூடாது என்பதுதான் எங்களது நோக்கம்.
அதற்காக ஒவ்வொருவரும் நேரம், பணத்தை செலவு செய்து வருகிறோம். இதனை கற்றுக் கொள்ள இளைஞர்களும், மாணவர்களும் முன்வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆண்டுக்கு இரு அரங்கேற்றம் செய்கிறோம். ஒரு அரங்கேற்றத்துக்கு 50 பேர் வீதம் ஆண்டுக்கு நூறு பேருக்கு கற்றுத் தருகிறோம். இதுவரை 700-க்கும் அதிகமானவர்களிடம் கலையை கொண்டு சென்றுள்ளோம்’ என்றார்.