

புதுச்சேரி வரலாற்றிலேயே நாராயணசாமி தலைமையிலான அரசு மிக மோசமான நிலையில் இருந்ததாக பாஜக தேசிய இளைஞரணித் தலைவர் தேஜஸ்வி சூர்யா விமர்சித்துள்ளார்.
பாஜக தேசிய இளைஞரணித் தலைவர் தேஜஸ்வி சூர்யா எம்.பி. இன்று (மார்ச் 23) புதுச்சேரி வந்தார். அவருக்கு புதுச்சேரி மாநில பாஜக இளைஞரணித் தலைவர் கோவிந்தன் கோபதி தலைமையில், இருசக்கர வாகனத்தில் பேரணியாகச் சென்று லாஸ்பேட்டை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து, லாஸ்பேட்டை தொகுதி பாஜக வேட்பாளர் சாமிநாதனை ஆதரித்து, லாஸ்பேட்டை நேதாஜி சிலை அருகிலும், நெல்லித்தோப்பு தொகுதி வேட்பாளர் ரிச்சர்ட்ஸை ஆதரித்து லெனின் வீதியிலும் தேஜஸ்வி சூர்யா பிரச்சாரம் மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து தனியார் மண்டபத்தில் இளைஞரணி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த, இளைஞர்கள், மாணவர்களுடனான கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசினார்.
அப்போது அவர் கூறும்போது, ‘‘காங்கிரஸ் கட்சி கடந்த தேர்தலில் வீட்டுக்கு ஒருவருக்கு வேலை வழங்கப்படும், கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும் எனப் பல்வேறு வாக்குறுதிகளைத் தங்கள் தேர்தல் அறிக்கையில் கொடுத்து ஆட்சிக்கு வந்தனர். ஆனால், எதையும் அவர்கள் நிறைவேற்றவில்லை. தொழிற்சாலைகள் மூடப்பட்டதால் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை. ஆகவே புதுச்சேரியில் நல்ல அரசை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியால் மட்டுமே கொடுக்க முடியும்’’ என்றார்.
இதனையடுத்து, பாஜக தலைமை அலுவலகத்தில் தேஜஸ்வி சூர்யா எம்.பி. செய்தியாளர்களிடம் கூறியதாவது:
‘‘புதுச்சேரியில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி தலைமையில் இருந்த காங்கிரஸ் அரசு ஊழல் மிகுந்ததாகவும், புதுச்சேரி வரலாற்றிலேயே மிக மோசமான நிலையிலும் இருந்தது. புதுச்சேரியில் தொழில், சுற்றுலா, கல்வி, ஆன்மிகம் ஆகியவை மேம்படுத்தப்படாமல், வேலைவாய்ப்பு உள்ளிட்ட அனைத்துத் துறைகளும் வீழ்ச்சியடைந்துள்ளன.
இந்திய அளவில், புதுச்சேரியில்தான் வேலை வாய்ப்பின்மை அதிகமாக உள்ளது. புதுச்சேரியில் இத்தேர்தலில் நல்ல கூட்டணி அமைந்துள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, வேலைவாய்ப்பின்மையைப் போக்கும். மூடியுள்ள மில்களைத் திறந்து இயக்க நடவடிக்கை எடுக்கும். இதனால், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரிக்கும், வியாபாரம், சுற்றுலா மேம்படும், ஐடி நிறுவனங்கள் கொண்டு வரப்படும். இதற்கு தேசிய ஜனநாயகக் கூட்டணி உத்தரவாதம் அளிக்கும்.
தற்போது இளைஞர்கள் அனைவருக்குமே நல்ல உடை அணிய வேண்டும், லேட்டஸ்ட் பைக் வாங்க வேண்டும், நல்ல வாழ்க்கை வாழ வேண்டும் என்ற ஆசைகள் இருக்கின்றன. ஆனால் வேலைவாய்ப்பின்மையால் எதையும் செய்ய முடியவில்லை. இளைஞர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகளையும், புதிய தொழில்நுட்பங்களையும் புகுத்தி தொழில் முனைவோர்களாக்க வேண்டும்.
புதுச்சேரிக்கு இரட்டை இன்ஜின் வேகத்தில் வளர்ச்சி தேவைப்படுகிறது. நாட்டிலேயே சிறந்த யூனியன் பிரதேசமாக மாற்ற வேண்டும். இதற்கு சுற்றுலா, சாலை உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும். கோவாவைப் போல், புதுச்சேரியையும் தென்னிந்தியாவில் சிறந்த சுற்றுலாத் தலமாக மாற்ற முடியும்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி இதனைச் செய்யும். முன்னாள் முதல்வர் நாராயணசமி அவரது தலைவரையே தவறாக வழிநடத்தியுள்ளார். இதனால், புதுச்சேரியில் எந்தத் தொகுதியில் போட்டியிட்டாலும் நாராயணசாமி தோல்வி அடைந்திருப்பார். புதுச்சேரி மாணவர்களுக்கு 50 சதவீதம் மருத்துவப் படிப்புக்கு ஒதுக்கீடு வழங்க வேண்டும். கடந்த 6 ஆண்டுகளில், பிரதமர் மோடி அரசு இந்தியாவில் இரட்டை இலக்கத்தில் மருத்துவச் சேர்க்கை இடங்களை அதிகரித்துள்ளது. ஆனால், இது புதுச்சேரியில் நடக்கவில்லை.
மருத்துவப் படிப்புக்கான இடங்களை ரூ.50 லட்சம், ரூ.1 கோடி என்ற அளவில் விற்றுள்ளனர். இதனால், வசதி படைத்தவர்களின் பிள்ளைகள்தான் மருத்துவம் படிக்கின்றனர். இதனை மாற்ற வேண்டும். புதுச்சேரியை உயர்ந்த கல்வி மையமாக மாற்ற முடியும். 2020 தேசியக் கல்வி கொள்கையின் கீழ் இதனை மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுடன் இணைந்து, இங்குள்ள பல்கலைக்கழகத்தை மேம்படுத்த முடியும். புதுச்சேரியில் செயலிழந்த காங்கிரஸ், திமுகவை மக்கள் புறக்கணிக்க வேண்டும். புதிய புதுச்சேரிக்கான அடித்தளம் அமைக்க காங்கிரஸைப் புறக்கணித்து, தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வாய்ப்பளிக்க வேண்டும்’’.
இவ்வாறு தேஜஸ்வி சூர்யா தெரிவித்தார்.