திருச்சி காங்கிரஸ் எம்.பி.யைக் கண்டுபிடித்து தருவோருக்கு ரூ.1 லட்சம் பரிசு: அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கிண்டல்

அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் - சு.திருநாவுக்கரசர்: கோப்புப் படம்.
அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் - சு.திருநாவுக்கரசர்: கோப்புப் படம்.
Updated on
1 min read

திருச்சி காங்கிரஸ் எம்.பி.யைக் கண்டுபிடித்துத் தருவோருக்கு ரூ.1 லட்சம் பரிசு என, அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன் கிண்டலாகத் தெரிவித்துள்ளார்.

திருச்சி கிழக்குத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன், இன்று (மார்ச் 23) பாலக்கரை பகுதியில் வாக்கு சேகரித்தார். ஆவின் தலைவர் சி.கார்த்திகேயன், அதிமுக இளைஞரணி மாநில இணைச் செயலாளர் ஜெ.சீனிவாசன் உள்ளிட்டோர் அவருடன் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனர்.

பாலக்கரை எடத்தெரு அண்ணா சிலை அருகில் இருந்து பிரச்சாரத்தைத் தொடங்கிய வெல்லமண்டி என்.நடராஜன், வீடுதோறும் சென்று இரட்டை இலைச் சின்னத்தில் வாக்களித்து தன்னை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றார்.

அருளானந்தம் நகர் பகுதியில் அவர் வாக்குச் சேகரித்துப் பேசியதாவது:

"சட்டப்பேரவை மற்றும் மக்களவை உறுப்பினராக உள்ளூரைச் சேர்ந்தவர் இருந்தால்தான் தொகுதி மக்களின் கோரிக்கைகள் குறித்துச் சட்டப்பேரவையிலோ, மக்களவையிலோ பேச முடியும். மக்களவைத் தேர்தலில் திருச்சி தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்ற சு.திருநாவுக்கரசர், மக்களின் கோரிக்கைகள் குறித்து நாடாளுமன்றத்தில் போய் பேசுவார் என்று பார்த்தால், ஆளையே காணோம். தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு ஊரைவிட்டு ஓடிவிட்டார். அவரைக் கண்டுபிடித்துத் தருபவருக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு.

இப்போது, திருச்சி கிழக்குத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட ஆள் கிடைக்கவில்லை. உள்ளூரில் இருந்து ஆள் திரட்ட முடியாமல் சென்னையில் இருந்து அழைத்து வந்து ஒருவரைத் தேர்தலில் நிற்கவைத்துள்ளனர். இவரும் தேர்தல் முடிந்த பிறகு சென்னையில்தான் தங்குவார். எனவே, வெளியூரைச் சேர்ந்தவர்களை வெற்றி பெற வைத்தால் நமது நிலை என்னாவது?

இந்தத் தொகுதியின் எம்எல்ஏவாக, அமைச்சராக கடந்த 5 ஆண்டுகளாக காலம் பணியாற்றியுள்ளேன். சிறப்பாகப் பணியாற்றியதாலேயே நான் மீண்டும் போட்டியிட கட்சி வாய்ப்பு அளித்துள்ளது. திருச்சி கிழக்குத் தொகுதிக்குட்பட்ட காந்தி மார்க்கெட்டில்தான் எனது வீடு உள்ளது. அங்கேயே பிறந்து, அங்கேயே வளர்ந்து, அங்கேயே வாழ்ந்து வருகிறேன். இங்கேயே இருந்து தொடர்ந்து மக்கள் தொண்டாற்றுவேன். எனவே, மண்ணின் மைந்தனான என்னை வெற்றி பெறச் செய்ய வேண்டும்".

இவ்வாறு அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன் பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in