கிருஷ்ணகிரி நகரில் 1 கி.மீ. தூரம் நடந்து சென்று வாக்கு சேகரித்த ஸ்டாலின்
கிருஷ்ணகிரி நகரில் சுமார் 1 கி.மீ. தூரத்துக்கும் மேல் நடைபயணம் மேற்கொண்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆதரவு திரட்டினார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி தொகுதிக்கு உட்பட்ட சூளகிரி நகரில் திமுக வேட்பாளர்கள் கிருஷ்ணகிரி செங்குட்டுவன், வேப்பனஹள்ளி முருகன், ஓசூர் பிரகாஷ், பர்கூர் மதியழகன், தளி இந்தியக் கம்யூனிஸ்ட் வேட்பாளர் ராமச்சந்திரன், ஊத்தங்கரை காங்கிரஸ் வேட்பாளர் ஆறுமுகம் ஆகியோரை ஆதரித்து, திமுக தலைவர் ஸ்டாலின் இன்று (மார்ச் 23) பிரச்சாரம் மேற்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து, கிருஷ்ணகிரி - சென்னை சாலையில் உள்ள தமிழ்நாடு ஓட்டலுக்குச் செல்லும் வழியில் கிருஷ்ணகிரி நகருக்குள் வந்த ஸ்டாலின், சப்-ஜெயில் சாலையில் வாகனத்தில் இருந்து கீழே இறங்கி, சாலையில் நடைபயணமாகச் சென்று கிருஷ்ணகிரி வேட்பாளர் செங்குட்டுவனுக்கு வாக்குகள் சேகரித்தார்.
நகரின் மைய பகுதியான ரவுண்டானாவில் சாலையோரம் உள்ள பெண் வியாபாரிகள், இளைஞர்கள், தொழிலாளர்கள் உட்பட அனைத்துத் தரப்பினருக்கும் ஸ்டாலின் கைகொடுத்து ஆதரவு கேட்டார்.
அப்போது, இளைஞர்கள், பெண்கள் தங்களது செல்போனில் ஸ்டாலினுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.
ரவுண்டானா வழியாக சென்னை சாலையில் நடந்து சென்ற ஸ்டாலின், பேருந்தில் இருந்த பயணிகளைப் பார்த்து உற்சாகத்துடன் கைகளை அசைத்தார்.
கிருஷ்ணகிரி நகரப் போக்குவரத்துக் கழக பணிமனை வரை நடந்து சென்ற ஸ்டாலின் பின்னர், வாகனத்தில் ஏறி தமிழ்நாடு ஓட்டலுக்குச் சென்றார்.
கிருஷ்ணகிரி நகரில் சுமார் 1 கி.மீ. தூரத்திற்கும் மேல் நடைபயணம் மேற்கொண்டு ஸ்டாலின் ஆதரவு திரட்டினார்.
