

நகை பறிப்பு வழக்கில் துப்பு துலக்கியதோடு மட்டுமின்றி இரட்டை கொலை வழக்கிலும் சாதுர்யமாக துப்பு துலக்கிய சைதாப்பேட்டை தனிப்படை போலீஸாரை காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் நேற்று நேரில் அழைத்து பாராட்டினார்.
சென்னை நந்தனம் விரிவு பகுதியில் தனியார் மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. கடந்த 13-ம் தேதி இரவு, இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது போல புகுந்த கும்பல் ஒன்று அங்கிருந்த மருத்துவர் மற்றும் செவிலியர்களிடமிருந்து 21 பவுன் தங்க நகைகளை பறித்துத் தப்பியது. இதுகுறித்து சைதாப்பேட்டை காவல் நிலைய தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தினர்.
மருத்துவர், செவிலியர்களிடம் கைவரிசை காட்டியதாக சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தரவிகுமார் என்ற ராக்கப்பன் (42) மற்றும் அவரது கூட்டாளிகளான மயிலாப்பூரைச் சேர்ந்தவெங்கடேசன் என்ற கறுக்கா வெங்கடேசன் (44), கோட்டூர்புரத்தைச் சேர்ந்த நெல்சன் (47) அனகாபுத்தூரைச் சேர்ந்த சீனிவாசன் (45), ஏழுமலை என்ற ரஜினி ஏழுமலை (55), சிவகங்கை, உடையன் குளம் ராஜசிங்கம் என்ற ராஜா (33) ஆகிய 6 பேரை கைது செய்தனர்.
அவர்களை தனி இடத்தில் வைத்து விசாரணை நடத்தியபோது இவர்கள் 6 பேரும் சேர்ந்து கடந்த 9-ம் தேதி இரவு தங்கள் முன்னாள் கூட்டாளிகளான அண்ணாதுரை மற்றும் தங்கபாண்டி ஆகிய இருவரையும் கொலை செய்து அவர்களின் சடலத்தை வேளச்சேரியில் உள்ள பாழடைந்த கிணற்றில் வீசிச் சென்றது தெரிந்தது. இதையடுத்து தீயணைப்பு படை வீரர்கள் உதவியுடன் இருவரின் சடலங்களும் மீட்கப்பட்டன.
நகைப் பறிப்பு வழக்கை துப்பு துலக்கியதோடு மட்டுமின்றி, இரட்டை கொலை வழக்கிலும் சாதுர்யமாக செயல்பட்டு துப்பு துலக்கிய தனிப்படை போலீஸாரை காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் நேற்று நேரில் வரவழைத்து பாராட்டி வெகுமதி அளித்தார்.