அமமுகவுக்கு ஆதரவளித்து புதுச்சேரியில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கி வையுங்கள்: டிடிவி தினகரன் பிரச்சாரம்

அமமுகவுக்கு ஆதரவளித்து புதுச்சேரியில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கி வையுங்கள்: டிடிவி தினகரன் பிரச்சாரம்
Updated on
2 min read

அமமுகவுக்கு ஆதரவளித்து புதுச்சேரியில் ஒரு புதிய அத்தியாயத்தை மக்கள் தொடங்கி வைக்க வேண்டும் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் (அமமுக), சோஷியல் டெமாக்ரடிக் பார்டி ஆஃப் இந்தியா (எஸ்டிபிஐ) கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது.

இந்நிலையில், புதுச்சேரி மாநில அமமுக சார்பில் ஏஎப்டி மைதானத்தில் இன்று (மார்ச் 19) மாலை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்துப் பேசியதாவது,

‘‘புதுச்சேரியில் இதுவரை மாநில அந்தஸ்தைப் பெற்றுத்தருகின்ற விஷயத்தில் ஏற்கெனவே ஆண்ட காங்கிரஸ் அரசாக இருக்கட்டும், மத்தியில் ஆளுகின்ற பாஜக என இரண்டு கட்சிகளுமே மக்களை ஏமாற்றி வருகின்றனர் என்பது தான் உண்மை.

கடந்த 7 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சியில் இருக்கின்ற பாஜக அதற்கான எந்தவொரு முயற்சியையும் இதுவரை எடுக்கவில்லை.

கடந்த நான்கரை ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியில் இருந்த நாராயணசாமி, மத்தியில் பாஜக ஆட்சி இருப்பதால் என்னால் எதுவும் செய்ய முடியவில்லை என்றார்.

அதற்கு, முன்பு அவர் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் பிரதமர் அலுவலக அமைச்சராக இருந்தார்.

அப்போதாவது புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைக்க முயற்சி செய்தாரா? என்பதை மக்கள் எண்ணிப்பார்க்க வேண்டும். காங்கிரஸ் கட்சிக்கு துணையாக இருக்கின்ற திமுகவும், பாஜகவுக்கு துணையாக இருக்கின்ற அதிமுகவும் அதுபற்றி வாய் திறப்பதே இல்லை.

இவர்களுக்கு தக்க பாடம் புகட்டும் வகையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கூட்டணிக்கு இம்முறை வாய்ப்பளித்தால் புதுச்சேரியை மீட்டெடுப்போம் என்று உறுதி கூறுகிறேன்.

இதேபோல் மத்திய அரசிடம் உரிய நிதியை பெற ஒவ்வொரு முறையும் புதுச்சேரி மாநிலம் போராடும் நிலையை மாற்றுவோம். புதுச்சேரியின் உரிமைகளை நிலைநாட்ட நாங்கள் பாடுபடுவோம்.

மதச்சார்பின்மையை பாதுகாப்போம், சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாப்போம் என்று கோஷமிடும் திமுக இரண்டு மாதங்களுக்கு முன்பு இதே புதுச்சேரியில் நடத்திய நாடகத்தை நீங்கள் நன்கு அறிவீர்கள்.

தங்கள் ஆதரவுடன் ஒரு ஆட்சி நடப்பதையும் மறந்து அந்த ஆட்சியின் சிரத்தன்மை சிதைப்பதுபோல வரும் தேர்தலில் 30 இடங்களிலும் திமுக போட்டியிட்டு வெற்றி பெரும்.

அதில் ஒரு இடம் குறைந்தாலும் இதே மேடையில் நான் தற்கொலை செய்து கொள்வேன் என்று ஒருவரை பேசவைத்து, கூட்டணியை சிதைத்து, அதன் காரணமாக இங்கு இருந்த காங்கிரஸ் அரசு கவிழ பிள்ளையார்சுழிபோட்டது திமுக தான்.

அதன்மூலம் பாஜகவுக்கு துணைபோன ஸ்டாலினின் செயலை உண்மையான காங்கிரஸாரும், சிறுபான்மை மக்களும் மன்னிப்பார்களா? இதுதான் நீங்கள் காட்டும் லட்சனமா?

இதில் எனக்கு எந்த ஆச்சரியமும் இல்லை. காரணம் திமுகவின் இலக்கே அதுதான். புதுச்சேரி மக்கள், குறிப்பாக சிறுபான்மையினர் மக்கள் விழிப்போடு இருந்து இந்த வேடதாரிகளை விரட்டியடிக்க வேண்டும்.

ஆட்சி அதிகாரத்துக்காக எதையும் கையில் எடுப்பார்கள். புதுச்சேரி மக்கள் நலனுக்காக ஒரு துரும்பைக்கூட கிள்ளி எரியமாட்டார்கள். இப்படிப்பட்டவர்களை புறந்தள்ளி அமமுக கூட்டணிக்கு ஆதரவளிக்க வேண்டும்.

இங்கு போட்டியிடும் எங்கள் கூட்டணி வேட்பாளர்களை வெற்றிபெற செய்யவதன் மூலம் புதுச்சேரியில் ஒரு புதிய அத்தியாயத்தையும், வரலாற்றையும் மக்கள் தொடங்கி வைக்க வேண்டும்’’ இவ்வாறு டிடிவி தினகரன் பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in