

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தொகுதி திருப்புவனம் தினசரி சந்தையில் அதிமுக வேட்பாளரும், எம்எல்ஏவுமான எஸ்.நாகராஜன் காய்கறி வியாபாரியாக மாறி வாக்குச் சேகரித்தார்.
மானாமதுரை (தனி) தொகுதியில் எம்எல்ஏவாக இருக்கும் எஸ்.நாகராஜன் அதிமுக சார்பில் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து திமுக முன்னாள் அமைச்சர் தமிழரசி போட்டியிடுகிறார். இருவருக்கும் போட்டி கடுமையான நிலையில் நாகராஜன் நூதன முறையில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
அவர் திருப்புவனம் தினச்சந்தையில் கடையில் ஒரு மணி நேரம் அமர்ந்து காய்கறி வாங்க வந்த மக்களிடம் வாக்குச் சேகரித்தார். மேலும் அவர் பேசுகையில், ''எந்தக் குறையாக இருந்தாலும் என்னை எளிதில் அணுகி தெரிவிக்கலாம். நான் கடந்த 2 ஆண்டுகளாக எம்எல்ஏ அலுவலகத்திலேயே தங்கி மக்களின் குறைகளைக் கேட்டு நிவர்த்தி செய்து வந்தேன். அதனால் மீண்டும் எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்'' என்று கூறி வாக்குச் சேகரித்தார்.
எம்எல்ஏ காய்கறி வியாபாரியாக மாறி வியாபாரம் செய்தது, அங்குள்ள மக்களை வியப்பில் ஆழ்த்தியது.