

விவசாயத்துக்கு அடுத்தபடியாக அதிகம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிப்பது நெசவுத் தொழில். தமிழகத்தில் சுமார் 6 லட்சம் விசைத்தறிகள் இயங்குகின்றன. கோவை, திருப்பூர் மாவட்டங்களில் மட்டும் 2.5 லட்சம் விசைத்தறிகள் செயல்பட்டு வருகின்றன. நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 5 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.
விசைத்தறியாளர்களைப் பொறுத்தவரை, விலைவாசி உயர்வுக்கு ஏற்ப உற்பத்தியாளர்களிடமிருந்து கூலி உயர்வைப் பெறுவதற்காக கடந்த 1992-ம் ஆண்டு முதல் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை கூலி உயர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்படுகிறது. குறிப்பிட்ட காலஇடைவெளிகளில் ஒப்பந்தம் சரிவர நிறைவேற்றப்பட்டு, கூலி உயர்வு கிடைத்ததால் கூலிக்கு நெசவு செய்வோரின் பொருளாதாரம் சீராக இருந்தது.
ஆனால், 2014 முதல் கூலி உயர்வு ஒப்பந்தம் சரிவரக் கடைப்பிடிக்கப்படவில்லை. 2011-ம் ஆண்டு ஒப்பந்தக் கூலியிலிருந்து 30 சதவீதம் வரை உயர்த்தி வழங்க வேண்டிய கூலி உயர்வு, இதுவரை வழங்கப்படவில்லை. ஏற்கெனவே அளித்து வந்த கூலியையும் அவ்வப்போது ஜவுளிஉற்பத்தியாளர்கள் குறைத்து வழங்குவதால், வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து கோவை, திருப்பூர் மாவட்ட விசைத்தறியாளர்கள் சங்க நிர்வாகிகள் கூறும்போது, "கூலி உயர்வு இல்லாதது மட்டுமின்றி, எங்களிடம் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு, போனஸ், போக்குவரத்து வாடகை, கிடங்கு வாடகை, மின் கட்டணம், உதிரிபாகங்கள் விலை உயர்வு என அனைத்துப் பிரச்னைகளையும் சமாளிக்க வேண்டிய நிலை உள்ளது. இதனாலேயே, தொழிலுக்காக வங்கிகளில் பெற்ற கடனை பலரால் திருப்பிச் செலுத்த முடியவில்லை. இதற்கு மத்தியில், பண மதிப்பு நீக்க நடவடிக்கை, ஜிஎஸ்டி, கரோனா கால ஊரடங்கு ஆகியவை, விசைத்தறி தொழிலை கடுமையாகப் பாதித்தன.
இதனால், தமிழகம் முழுவதும் வங்கிகளில் விசைத்தறியாளர்கள் கடந்த 2017-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதிக்கு முன்னதாகப் பெற்ற, மூலதனக் கடன் ரூ.65 கோடியை தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
கோவை, திருப்பூர் மாவட்டங்களில் இருந்து மட்டும் தினமும் ஒரு கோடி மீட்டர் துணி உற்பத்தி செய்யப்படுகிறது. ஜிஎஸ்டி மூலமாக இதிலிருந்து அரசுக்கு பெரும் வருவாய் கிடைக்கிறது. இதையும் எடுத்துக் கூறி, தள்ளுபடி கோரிக்கையை முன்வைத்தோம். கடந்த 2 ஆண்டுகளாகப் போராடியும் தமிழக அரசோ, அதிகாரிகளோ எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது ஏமாற்றம் அளிக்கிறது" என்றனர்.
"கடந்தமுறை சட்டப்பேரவை இடைத்தேர்தல் பிரச்சாரத்துக்காக சூலூர் வந்த தமிழக முதல்வர்கே.பழனிசாமி, விசைத்தறியாளர்கள் வங்கியில் பெற்ற கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று வாக்குறுதி அளித்தார். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை" என்கிறார் கோவை, திருப்பூர் மாவட்ட விசைத்தறியாளர்கள் சங்கச் செயலர் எம்.பாலசுப்ரமணியன்.
இதுகுறித்து அவர் மேலும் கூறும்போது, "தற்போதுள்ள சூழலில்விசைத்தறியாளர்கள் பலர் கடனைத் திருப்பிச் செலுத்த இயலாமல், ஜப்தி நடவடிக்கையைத் தவிர்க்க நீதிமன்றங்களை நாடியுள்ளோம். பல விசைத்தறியாளர்கள் ஏற்கெனவே ஜப்தி நடவடிக்கைக்கு உட்பட்டு, பல்வேறு சிரமங்களை சந்தித்துக் கொண்டிருக்கின்றனர். கடன் தள்ளுபடி தொடர்பாக 2019-ல் சூலூர் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு நம்பிக்கையை ஏற்படுத்தியது. அதற்குப் பிறகு கைத்தறித் துறை மூலமாக, வங்கிகளில் விசைத்தறியாளர்கள் பெற்ற கடன்கள் குறித்து ஆய்வு செய்தனர். அத்துடன் சரி, வேறெந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இது தொடர்பாக பலமுறை முதல்வர், அமைச்சர்கள், அதிகாரிகளை சந்தித்து விட்டோம். ஆனாலும்பயனில்லை. அதிமுக தேர்தல் அறிக்கையில், விசைத்தறியாளர்களுக்கு ரூ.1 லட்சம் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொருவரும் ரூ.10 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை கடன் பெற்று, தொழில் பிரச்சினையால் தவித்து வருகிறோம். இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் அறிவித்து விட்டு, பிறகு அதை நிறைவேற்றிக் கொடுக்காதது ஒட்டுமொத்த விசைத்தறியாளர்களிடம் ஏமாற்றத்தையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த ஏமாற்றம் சட்டப்பேரவைத் தேர்தலில் நிச்சயம் எதிரொலிக்கும்" என்றார்.