

கடலூரில் அமைச்சர் சம்பத் ஆதரவாளர்கள் 5 பேர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
கடலூரில் அமைச்சர் எம்.சி.சம்பத்தின் ஆதரவாளர்களான கடலூர் சூரப்பநாயக்கன் சாவடியைச் சேர்ந்த மாவட்ட ஜெயலிலிதா பேரவை பொருளாளர் மதியழகன், கம்மியம்பேட்டையைச் சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் தமிழ்ச்செல்வன், புதுப்பாளையம் ராமதாஸ் தெருவைச் சேர்ந்த அதிமுக மாவட்ட இணை செயலாளர் உமாமகேஸ்வரி பாலகிருஷ்ணன், அதிமுகவைச் சேர்ந்த ஒப்பந்தக்காரர் திருப்பாதிரிபுலியூர் சுரேஷ், செம்மண்டலம் அதிமுகவைச் சேர்ந்த பைனான்சியர் சரவணன் ஆகிய 5 பேர் வீட்டிலும், சென்னை, கடலூர் மற்றும் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று (மார்ச் 18) காலை 12 மணியில் இருந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சோதனை நடைபெறும் வீட்டுக்குள்ளே யாரையும் அனுமதிக்கவில்லை. அதுபோல வீட்டில் இருப்பவர்களையும் வெளியே செல்ல அனுமதிக்கவில்லை. தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது.
இவர்கள் அனைவரும் தொழில்துறை அமைச்சர் சம்பத்தின் ஆதரவாளர்கள் ஆவார்கள். இவர்கள் அமைச்சர் சம்பத்துக்கு ஆதரவாகத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். வாக்காளர்களுக்குப் பணப் பட்டுவாடா செய்ய 5 பேர் வீட்டில் பணம் இருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர் என்று கூறப்படுகிறது.