

'மாஸ்க் புதுச்சேரி' என்ற ஒரு இயக்கத்தை அனைவரும் முன்னெடுத்துச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். முன்னெச்சரிக்கையோடு இருக்க வேண்டும். நிச்சயமாக கரோனா தொற்று கட்டுப்படுத்தப்படும் என்று புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி பழைய துறைமுக வளாகத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பாரம்பரிய சுற்றுலா வளாக வளர்ச்சி திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று (மார்ச் 18) நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, சுற்றுலாவை மேம்படுத்தும் இத்திட்டத்தின் கீழ் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து வரைபடத்தின் மூலம் ஆளுநருக்கு அதிகாரிகள் விளக்கினர். இதனைக் கேட்டறிந்த ஆளுநர் அங்கு சுற்றுலா பயணிகளுக்குத் தங்கும் விடுதிகள், பூங்கா, கடற்கரை விளையாட்டு உள்ளிட்ட பொழுது போக்கு அம்சங்கள் நிறைந்த அனைத்து வசதிகளையும் உருவாக்க வேண்டுமெனவும், மாநிலத்துக்கு வருவாயைப் பெருக்கி அதிக சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்திழுக்கும் வகையில் நவீன கட்டமைப்பை ஏற்படுத்தவும் அதிகாரிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.
இதைத் தொடர்ந்து, பழைய துறைமுக பிரிட்ஜிற்கும் சென்று ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது ஆளுநரின் ஆலோசகர்கள் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
பின்னர் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
''பழைய துறைமுகமாகப் பயன்படாமல் இருந்த இடத்தைச் சுற்றுலாவுக்குப் பயன்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. புதுச்சேரியின் புராதான நிலை எல்லா மக்களுக்கும் தெரிய வேண்டும்.
இந்த இடத்தை இன்னும் மேம்படுத்தினால் பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்கும், புதுச்சேரியின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கும் வசதியாக இருக்கும். புதுச்சேரியைச் சுற்றுலா சொர்க்கமாக மாற்ற வேண்டும் என்பது ஆசை. அதற்காக தொலைநோக்குடன் திட்டங்களைச் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். புதுச்சேரியில் கடந்த இரு தினங்களாக கரோனா தொற்று சற்று அதிகரித்துள்ளது. எனவே, எல்லோரும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
நேற்று காணொலிக் காட்சி மூலம் பிரதமர் அனைத்து மாநில முதல்வர்கள் மற்றும் துணைநிலை ஆளுநர்களுடன் பேசும்போது மிகுந்த கவலையைத் தெரிவித்தார். நாம் இன்னும் கரோனா தொற்றிலிருந்து வெளியே வரவில்லை. கரோனா இல்லை என்று நினைத்துக் கொள்கிறோம். யாரெல்லாம் தடுப்பூசி போட வேண்டுமோ, அவர்களெல்லாம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். தடுப்பூசி போடுவதால் முற்றிலும் கரோனா வராது என்று சொல்ல முடியாது. பரவாமல் தடுக்கலாம். தடுப்பூசி போட்டாலும் கரோனா வர வாய்ப்புள்ளது. எனவேதான் முகக்கவசம் அணியுமாறு அறிவுறுத்துகிறோம்.
ஒருவேளை சிலரின் உடல்வாகினால் கரோனா தொற்று வந்தாலும் வீரியத்தன்மை இல்லாமல் இருக்கும். அபாயகரமான கட்டத்துக்கு நம்முடைய உடல் வராது. எனவே 'மாஸ்க் புதுச்சேரி' என்ற ஒரு இயக்கத்தை அனைவரும் முன்னெடுத்துச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். முன்னெச்சரிக்கையோடு இருக்க வேண்டும். நிச்சயமாக கரோனா தொற்று கட்டுப்படுத்தப்படும். மக்கள் பாதுகாப்பாக இருக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்''.
இவ்வாறு தமிழிசை தெரிவித்தார்.