

திமுக தலைவர் கருணாநிதி மறைந்தபோது அவரது கடைசி ஆசை அண்ணாவுக்குப் பக்கத்தில் இடம். ஆனால், தலைவருக்கு 6 அடி இடம் கொடுக்க முதல்வர் பழனிசாமி சம்மதிக்கவில்லை. ஆறடி இடம் தராத பழனிசாமிக்கு தமிழகத்தில் இடம் கொடுக்கலாமா? என ஸ்டாலின் பேசினார்.
திமுக தலைவர் ஸ்டாலின் மேற்கு தாம்பரத்தில் இன்று பிரச்சாரம் செய்தார்.
அப்போது அவர் பேசியதாவது:
“தலைவர் நம்மை விட்டு மறைந்தபோது அவருடைய கடைசி ஆசை, அண்ணாவிற்குப் பக்கத்தில் ஓய்வெடுக்க வேண்டும். அவர் உயிர் பிரிகின்ற நேரத்தில்கூட கடைசியாக உபயோகித்த வார்த்தை அண்ணா என்பதுதான். அதை நிறைவேற்ற இந்த ஆட்சி சம்மதிக்கவில்லை.
நானே நேரடியாக முதல்வரைச் சந்திக்கச் சென்றேன். என்னை எல்லோரும் தடுத்தார்கள். நாம் அதற்குப் பிறகு நீதிமன்றத்தை நாடி, வழக்குப் போட்டு, நீதிமன்றம் சரியான தீர்ப்பு கொடுத்தது. இந்த நாட்டிற்கு எத்தனை பிரதமர்களை உருவாக்கித் தந்த தலைவர்.
எத்தனையோ குடியரசுத் தலைவர்களை அடையாளம் காட்டிய தலைவர். 5 முறை தமிழ்நாட்டின் முதல்வராக இருந்து ஆட்சி நடத்திய தலைவர். தோல்வியே பார்த்திராத ஒரே தலைவர் நம்முடைய தலைவர் கருணாநிதி.
எவ்வளவு திட்டங்கள் சாதனைகளை உலகெங்கும் இருக்கும் பல்வேறு தரப்புத் தமிழ் மக்களுக்கும் செய்தவர். அத்தகைய தலைவருக்கு ஆறடி இடம் கொடுக்க மறுத்தார்கள். தலைவர் கருணாநிதிக்கு ஆறடி இடம் கொடுக்க மறுத்த பழனிசாமிக்குத் தமிழ்நாட்டில் இடம் கொடுக்கலாமா சிந்தியுங்கள். செயல்படுங்கள்”.
இவ்வாறு ஸ்டாலின் உரையாற்றினார்.