புதுச்சேரியில் புதிதாக 52 பேருக்கு கரோனா தொற்று

பிரதிநிதித்துவப் படம்.
பிரதிநிதித்துவப் படம்.
Updated on
1 min read

புதுச்சேரியில் புதிதாக 52 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழப்பு ஏற்படவில்லை. நீண்ட நாட்களுக்குப் பிறகு சற்று அதிகரித்தது.

இதுகுறித்து, புதுச்சேரி சுகாதாரத் துறைச் செயலாளர் அருண் இன்று (மார்ச் 17) வெளியிட்டுள்ள தகவல்:

"புதுச்சேரி மாநிலத்தில் 1,290 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், புதுச்சேரியில் 43 பேருக்கும், காரைக்காலில் 3 பேருக்கும், ஏனாமில் ஒருவருக்கும், மாஹேவில் 5 பேருக்கும் என மொத்தம் 52 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 40 ஆயிரத்து 120 ஆக உயர்ந்துள்ளது. இவர்களுள் மருத்துவமனைகளில் 98 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 116 பேரும் என 214 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்றைய தினம் உயிரிழப்பு ஏற்படவில்லை. இதனால் இறப்பு எண்ணிக்கை 673 ஆகவும், இறப்பு விகிதம் 1.68 சதவீதமாகவும் உள்ளது. இன்று புதிதாக 18 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால், வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 39 ஆயிரத்து 233 (97.79 சதவீதம்) ஆக உள்ளது.

புதுச்சேரியில் 6 லட்சத்து 48 ஆயிரத்து 349 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில், 6 லட்சத்து 2 ஆயிரத்து 73 பரிசோதனைகளுக்குத் தொற்று இல்லை என முடிவு வந்துள்ளது.

இதுவரை 14 ஆயிரத்து 989 சுகாதாரத்துறை பணியாளர்களுக்கும், 5,579 முன்களப் பணியாளர்களுக்கும், 12 ஆயிரத்து 35 பொதுமக்களுக்கும் என, 32 ஆயிரத்து 603 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது".

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக குறைவான எண்ணிக்கையிலேயே இருந்து வந்த கரோனா தொற்று தற்போது 50-ஐத் தாண்டியிருப்பது புதுச்சேரியில் கரோனாவின் தாக்கம் மீண்டும் சற்று அதிகரித்துள்ளது என்பதைக் காட்டுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in