நத்தம் விஸ்வநாதனை 10 நாள் பூட்டி வைத்திருந்த ஜெயலலிதா: ஸ்டாலின் பேச்சு 

நத்தம் விஸ்வநாதனை 10 நாள் பூட்டி வைத்திருந்த ஜெயலலிதா: ஸ்டாலின் பேச்சு 
Updated on
1 min read

100 நாட்களில் பிரச்சினையை ஸ்டாலின் தீர்ப்பேன் என்று சொல்கிறார். அது நடக்காது முடியாது - யாரும் நம்பாதீர்கள் என்று முதல்வர் பழனிசாமி சொல்லியிருக்கிறார். கலெக்‌ஷன், கரப்ஷன், கமிஷன்தான் அவருக்குத் தெரியும் என ஸ்டாலின் பேசினார்.

நத்தம் - வடமதுரையில் பொதுமக்களிடையே தேர்தல் பிரச்சாரத்தில் ஸ்டாலின் பேசியதாவது:

"நான் “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்ற தலைப்பில் தமிழ்நாட்டில் இருக்கும் ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதியாகச் சென்று, அந்தத் தொகுதியில் இருக்கும் மக்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்கான ஒரு திட்டத்தை அறிவித்தேன்.

வரவிருக்கும் தேர்தலில் நாம்தான் ஆட்சிக்கு வரப் போகிறோம். அதில் எந்தச் சந்தேகமும் இல்லை. அது உறுதி. ஆட்சிக்கு வந்த அடுத்த நாளிலிருந்து 100 நாட்களில் மக்கள் பிரச்சினைகளை உடனடியாகத் தீர்த்து வைப்போம் என்று சொல்லி அந்தத் திட்டத்தை நான் அறிவித்தேன். அந்தத் திட்டம் இன்றைக்கு மக்களின் மனதில் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது; நம்பிக்கையை வழங்கி இருக்கிறது.

அதனால் ஆத்திரமடைந்த முதல்வர் பழனிசாமி, நேற்றைக்குத் தன்னுடைய பிரச்சாரத்தில், 100 நாட்களில் பிரச்சினையை ஸ்டாலின் தீர்ப்பேன் என்று சொல்கிறார். அது நடக்காது முடியாது - யாரும் நம்பாதீர்கள் என்று சொல்லியிருக்கிறார். அதை எவ்வாறு செய்ய முடியும் என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்?

இதைப் பற்றி எல்லாம் அவருக்குத் தெரியவே தெரியாது. அவருக்கு எங்கே சதவிகிதம் வாங்கலாம்? எங்கே ஊழல் செய்யலாம்? எங்கே கமிஷன் பெறலாம்? அவருடைய தொழில் கமிஷன், கரெப்ஷன், கலெக்‌ஷன்.

நத்தம் தொகுதியில் நம்மை எதிர்த்துப் போட்டியிடும் அதிமுகவின் வேட்பாளர் நத்தம் விஸ்வநாதனைப் பற்றி நான் அதிகம் உங்களுக்குச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. நேற்றுகூட, பணப் பட்டுவாடா செய்ததாக அவர் மேல் ஒரு வழக்குப் போடப்பட்டு இருக்கிறது. எனவே, பணப் பட்டுவாடா எந்த அளவுக்கு அவர் செய்வார் - செய்து கொண்டிருக்கிறார் என்பது எல்லோருக்கும் நன்றாகத் தெரியும்.

அம்மையார் ஜெயலலிதாவிடமே கொள்ளையடித்தவர் - தண்டனை பெற்றவர் அவர். அப்படி என்றால் அவர் எப்படிப்பட்டவர் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். எத்தனுக்கு எத்தன். அவ்வாறு கொள்ளை அடித்த காரணத்தால் 10 நாட்கள் அவரைப் பூட்டி வைத்திருந்தார்கள். அதுமட்டுமல்ல, அவருக்குக் கடந்த தேர்தலில் வேட்பாளராக வாய்ப்பு தரக்கூடாது என்று முடிவு செய்தார்கள்.

அதனால்தான் நத்தம் தொகுதியில் கொடுக்காமல் ஆத்தூர் தொகுதியைக் கொடுத்தார்கள். அதற்கெல்லாம் நீங்கள் சரியான பதில் வழங்க வேண்டும்".

இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in