Last Updated : 16 Mar, 2021 06:40 PM

 

Published : 16 Mar 2021 06:40 PM
Last Updated : 16 Mar 2021 06:40 PM

மதுரை மேலூர் தொகுதியில் சமூக வாக்குகளைக் குறிவைத்து வேட்பாளர்களை களமிறக்கிய கட்சிகள்

மேலூர் சந்திப்பு

மதுரை

மதுரை மாவட்டம் மேலூர் தொகுதியில் சமூக வாக்குகளைக் குறிவைத்தே வேட்பாளர்களை கட்சிகள் களமிறக்கியுள்ளன.

மதுரை மாவட்டத்தில் சோழவந்தான் தனித்தொகுதி உட்பட 9 பொது தொகுதிகள் இடம்பெறுகின்றன. அதிமுக சார்பில், அமைச்சர்கள் செல்லூர் கே. ராஜூ, ஆர்.பி.உதயகுமார் உட்பட 8 பேரும், கூட்டணிக் கட்சியில் இருந்து இருவரும் போட்டியிருடுகின்றனர்.

திமுக சார்பில், பி. மூர்த்தி உட்பட 7 பேரும் , கூட்டணியில் மேலூரில் காங்கிரஸும், திருப்பரங்குன்றத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டும், உசிலம்பட்டியில் பார்வர்டு பிளாக் கட்சியும் போட்டியிடுகின்றன.

இந்நிலையில் மேலூர் தொகுதியை திமுக ஒதுக்கப்படும். பி.மூர்த்தி எம்எல்ஏ அல்லது ஏற்கெனவே நின்று தோல்வியைத் தழுவிய ரகுபதி, குலோத்துங்கன் உள்ளிட்டோர் இத்தொகுதியில் நிறுத்தப்படலாம் என அக்கட்சியினர் எதிர்பார்த்தனர்.

ஆனால், எல்லோருக்கும் அதிர்ச்சி அளிக்கும்வகையில் மேலூர் தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. சிறுபான்மை பிரிவு நிர்வாகி புரோஸ்கான் உள்ளிட்டோர் முயற்சித்த நிலையில், விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூரின் மாமனார் ரவிச்சந்திரனுக்கு ஒதுக்கப்பட்டது.

உள்ளூர் நிர்வாகிகளுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லையே என, காங்கிரஸார் அதிருப்தி அடைந்தாலும், வேறு வழியின்றி திமுக, காங்கிரஸார் தேர்தல் பணியை மேற்கொள்ளும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

அதிமுக பொறுத்தவரை முன்னாள் எம்எல்ஏ தமிழரசன், மேலூர் ஓன்றியத் தலைவர் பொன்னுச்சாமி, ஒன்றியச் செயலர் பொன். ராஜேந்திரன் உள்ளிட்டோர் ‘ சீட்’ கேட்டு வாய்ப்புக்காக காத்திருந்தனர்.

ஆனாலும், ஏற்கெனவே எம்எல்ஏவான பெரியபுள்ளானுக்கே வாய்ப்பளிக்கப்பட்டது. வாய்ப்பை நோக்கியவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும், வேறு வழியின்றி தலைமையின் அறிவுரையைக் கேட்டு பணி செய்யத் தொடங்கிவிட்டனர். காங்கிரஸ், அதிமுக தவிர, அமமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி என, 5 முனை போட்டி நிலவுகிறது.

இது தொடர்பாக அதிமுக, திமுக, காங்கிரஸ் கட்சியினர் கூறுகையில், ‘‘ மேலூர் தொகுதியைப் பொறுத்தவரையிலும் முத்தரையர், கள்ளர் சமூகத்தினர் வாக்குகளே அதிகமாக உள்ளது. அடுத்த நிலையில் இஸ்லாமியர்களும், பிற சமூகத்தினரும் இருக்கின்றனர்.

கள்ளர் அல்லது முத்தரையர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வேட்பாளர்களாக நிறுத்தினாலும் மட்டுமே ஜெயிக்க வாய்ப்பு இருக்கும். இதன்படி, காங்கிரஸில் கள்ளர் சமுதாயத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரனும், அதிமுகவில் முத்தரையர் சமூகத்தைச் சார்ந்த பெரியபுள்ளானும் களமிறக்கப்பட்டுள்ளனர்.

அமமுக சார்பில் செல்வராஜ், நாம் தமிழர் கட்சி வேட்பாளரான ஆசிரியர் கருப்புச்சாமி ஆகியோரும் கள்ளர் சமூகத்தைச் சேர்ந்தவர்களாகவே நிறுத்தப்பட்டுள்ளனர்.

மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் நிறுத்தப்பட்டுள்ள கதிரேசன் பிள்ளைமார் சமூகத்தைச் சார்ந்தவர். ஒருகாலத்தில் முன்னாள் அமைச்சர் கக்கன் போன்றவர்களை தீர்மானித்த மேலூர் தொகுதியில் பெரும்பான்மை சமூக ஓட்டுக்களை அடிப்படையாக கொண்டே கட்சிகள் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளனர்.

இதில் கள்ளர் சமூகத்தைச் சேர்ந்த வேட்பாளர்களே கூடுதலாக நிற்பதால் அதிமுகவுக்கு வாய்ப்பு இருக்கிறது என்றாலும், அதிருப்தியாளர்களின் தேர்தல் பணியைப் பொறுத்து இத்தொகுதியன் வெற்றி வாய்ப்பு மாறும்,’’ என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x