

தமிழகத்தில் 234 இடங்களிலும் திமுக வெற்றி பெறும். அதிமுக வாஷ் அவுட்டாகும் என்று ஸ்டாலின் பேசினார்.
திருவாரூரில் நேற்று நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ஸ்டாலின் பேசியதாவது:
“இந்தியாவின் வரலாற்றில் நாடாளுமன்றத்தில் இன்றைக்கு 3-வது இடத்தில் திமுக கம்பீரமாக இருக்கும் வகையில், நாடாளுமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றியைத் தேடித் தந்தீர்களோ, அதேபோல இந்தச் சட்டப்பேரவைத் தேர்தலிலும் மாபெரும் வெற்றியைத் தேடித் தர வேண்டும்.
200 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெறும் என்று ஒரு மாதத்திற்கு முன்னர் சொன்னேன். அது இப்போது அல்ல! இப்போது நான் சுற்றி வரும் பயணத்தில் உணரக்கூடிய உணர்வு என்ன என்று கேட்டால், இந்த நாடே எண்ணிக் கொண்டிருப்பது என்ன என்று கேட்டால் - இந்து ராம் அவர்களே தன்னுடைய ட்விட்டரில் பதிவு செய்திருக்கிறார். திமுக கூட்டணி 234-க்கு 234 இடங்களில் வெற்றி பெறப்போகிறது என்று சொல்லியிருக்கிறார். அதிமுக கூட்டணி ‘வாஷ் அவுட்’ அதுதான் தமிழக மக்களின் நிலையாக இன்று இருக்கிறது.
எனவே, அப்படிப்பட்ட வெற்றியைத் தேடித் தரவேண்டும் என்று உங்களை எல்லாம் கேட்டுக் கொள்வதற்காகத்தான், உங்களைத் தேடி - நாடி நான் இன்றைக்கு திருவாரூருக்கு வந்திருக்கிறேன். 10 ஆண்டுகாலமாக இந்த நாட்டைக் குட்டிச்சுவராக்கிக் கொண்டிருக்கும் பழனிசாமி தலைமையில் இருக்கும் அதிமுக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதற்காகத்தான் உங்களை தேடி - நாடி வந்திருக்கிறேன்.
ஜனநாயகத்தில் யார் வேண்டுமானாலும் தேர்தல் பிரச்சாரம் செய்யலாம்.. அதில் தவறில்லை. அதை விமர்சிக்க நான் விரும்பவில்லை. ஆனால், முதல்வராக இருக்கும் பழனிசாமி, வாய்க்கு வந்தபடியெல்லாம் - சொல்லும் அத்தனையும் பொய்யாகவே, பொய்களையே செய்திகளாகத் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கும் நிலையைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
ஜெயலலிதா இறந்ததற்குக் காரணம் கலைஞரும் ஸ்டாலினும்தான் என்று சொல்லியிருக்கிறார். கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். 10 ஆண்டு காலத்தில் 2-வது முறையாக ஆட்சிக்கு வந்ததற்குப் பிறகு அவர் உடல்நலிவுற்று மருத்துவமனையில் படுத்திருந்த நேரத்தில் அவர் உடல்நலத்தைப் பற்றி வெளியில் சொல்வதற்குக் கூட வகையில்லாத ஆட்சியைத்தான் இவர் நடத்திக் கொண்டிருக்கிறார்.
நான் தொடர்ந்து பல நேரங்களில் குறிப்பிட்டுக் காட்டி இருக்கிறேன். இப்போது நமது தேர்தல் அறிக்கையிலும் குறிப்பிட்டுச் சொல்லி இருக்கிறோம். அம்மையார் ஜெயலலிதா மர்ம மரணத்தை முறையாக விசாரித்து உரிய நடவடிக்கையை நாம் ஆட்சிக்கு வந்ததற்குப் பிறகு எடுப்போம் என்று உறுதிமொழி தந்திருக்கிறோம்.
பழனிசாமி இப்படிச் சொல்லி இருக்கிறார். இந்த 4 ஆண்டு காலம் நீங்கள்தான் ஆட்சியில் இருந்தீர்கள். அப்போது என்ன செய்து கொண்டிருந்தீர்கள். ஸ்டாலின்தான் காரணம் என்றால் உரிய நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் அல்லவா?
இப்போது சொல்கிறேன். தைரியம் இருந்தால் - தெம்பு இருந்தால் ஜெயலலிதா மரணத்திற்கு ஸ்டாலின்தான் காரணமென்றால் வழக்குப் போடுங்கள். சந்திப்பதற்கு நான் தயார். நீங்கள் தயாரா? நான் ரெடி. பழனிசாமி நீங்க ரெடியா?
எதை வேண்டுமானாலும் பேசிவிட்டுப் போகலாமா? நாக்கில் உங்களுக்கு நரம்பு இல்லையா? கலைஞர்தான் காரணம் என்று வாய்கூசாமல் பேசுகிறீர்களே எப்படி? அதுதான் எனக்கும் புரியவில்லை''.
இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.