

அதிமுக பொதுச் செயலாளர் பதவியை ரத்து செய்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை எதிர்த்து சசிகலா, டிடிவி தினகரன் தொடர்ந்த வழக்கு சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கிலிருந்து விலகுவதாக டிடிவி தினகரன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சசிகலா தரப்பில் அவகாசம் கோரப்பட்டது.
அதிமுகவின் பொதுக்குழுக் கூட்டம் 2017-ம் ஆண்டு செப்டம்பர் 12-ம் தேதி நடந்தது. அப்போது, கட்சியின் பொதுச் செயலாளர் பதவி ரத்து செய்யப்பட்டது. அதற்கு பதில், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற புதிய பதவிகள் உருவாக்கப்பட்டன.
இந்தத் தீர்மானத்தை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் சசிகலா உரிமையியல் வழக்குத் தொடர்ந்தார். 2017 செப்டம்பர் 12-ல் நடந்த அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து வி.கே.சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் மனுத்தாக்கல் செய்தனர்.
அவர்கள் தாக்கல் செய்த மனுவில், அதிமுக நிறைவேற்றிய தீர்மானம் சட்ட விரோதமானது. அந்த தீர்மானத்தை ரத்துசெய்ய வேண்டுமெனக் கோரியிருந்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், சென்னை பெருநகர உரிமையியல் நீதிமன்றம் விசாரிக்க உத்தரவிட்டது.
இந்நிலையில், உரிமையியல் நீதிமன்றப் பதிவாளருக்கு சசிகலா சார்பில் விசாரணையை விரைவாக நடத்தக் கோரி ஒரு கடிதம் அனுப்பப்பட்டது. இதையடுத்து, 4-வது சென்னை பெருநகர உரிமையியல் நீதிமன்றம் விசாரிக்கும் என்றும், வழக்கு மார்ச் 15-ல் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
வழக்கு விசாரணைக்கு வரும் முன்னரே சமீபத்தில் தான் அரசியலிலிருந்து விலகுவதாக சசிகலா திடீரென அறிவித்தார். இதனால் அதிமுக பொதுச் செயலாளர் என்கிற பொறுப்பிலிருந்து அவர் தாமாக விலகுவதாக அர்த்தம் ஆகிறது. இதனால் அவர் தாக்கல் செய்த வழக்கின் நிலை என்ன என்பது கேள்விக்குறியாக உள்ளது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
சசிகலா, தினகரன் வழக்குகளை நிராகரிக்கக் கோரி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் தரப்பில் நிராகரிப்பு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. டிடிவி தினரகன் தரப்பில்தான் அமமுக என்ற கட்சி தொடங்கிவிட்டதால் வழக்கில் இருந்து விலகிக் கொள்வதாகத் தெரிவிக்கப்பட்டது.
வழக்கை வாபஸ் பெறுவதா அல்லது தொடர்ந்து நடத்துவதா என்பது குறித்து விரைவில் முடிவு என சசிகலா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதிமுக பொதுக்குழுக் கூட்டம் தொடர்பான இருவரின் கோரிக்கைகளை தேர்தல் ஆணையம் நிராகரித்ததாலும், அதனை உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டதாலும் இந்த உரிமையியல் வழக்கை நிராகரிக்க வேண்டும் என அதிமுக நிர்வாகிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
சசிகலா தரப்பில் பதில் தெரிவிக்க அவகாசம் கேட்டதை அடுத்து, வழக்கு விசாரணை தேர்தலுக்குப் பின் ஏப்.9-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.