

ஒட்டப்பிடாரம் தொகுதியில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி போட்டியிடுகிறார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், அதிமுக கூட்டணியிலிருந்து விலகி, புதிய தமிழகம் கட்சி தனித்துக் களம் காண்பதாக அக்கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி அறிவித்தார்.
இந்நிலையில், சென்னையில் இன்று (மார்ச் 15) செய்தியாளர்களைச் சந்தித்த கிருஷ்ணசாமி, முதல் கட்டமாக 60 தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டார். அதன்படி, கிருஷ்ணசாமி, ஒட்டப்பிடாரம் தனித் தொகுதியில் போட்டியிடுகிறார். 1996-ல் அதே தொகுதியில் தனித்தும், 2011-ல் அதிமுக கூட்டணியில் போட்டியிட்டும் வெற்றி பெற்றவர் கிருஷ்ணசாமி.
இந்நிலையில், இந்தத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் பி.மோகன், திமுக வேட்பாளர் எம்.சி.சண்முகய்யா ஆகியோரை எதிர்த்துக் களமிறங்குகிறார் கிருஷ்ணசாமி. இத்தொகுதியில் தற்போது எம்.சி.சண்முகய்யா சட்டப்பேரவை உறுப்பினராக உள்ளார்.
செய்தியாளர் சந்திப்பில் பேசிய கிருஷ்ணசாமி, "இரண்டாம்கட்ட வேட்பாளர் பட்டியல் நாளை அல்லது நாளை மறுநாள் வெளியாகும். கட்சியின் தலைவர்தான் முதல்வர் வேட்பாளர். அதன்படி, எங்கள் கட்சியின் முதல்வர் வேட்பாளர் நான்தான். தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை புதிய தமிழகம் கொண்டு வரும். தமிழகத்தில் வலுவான அரசியல் கட்சி புதிய தமிழகம். சட்டப்பேரவையில் வளமான போர்க்குரல் எழுப்பக்கூடிய உறுப்பினர்களை அனுப்புவதுதான் இக்கட்சியின் நோக்கம்" எனத் தெரிவித்தார்.