

இந்தத் தேர்தல் மதச்சார்பின்மைக்கும், மதவாதத்திற்கும் இடையிலான மக்கள் யுத்தம் என, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், மக்களவை உறுப்பினருமான தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
திமுக கூட்டணியில் விசிகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்தத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை நேற்று (மார்ச் 14) திருமாவளவன் அறிவித்தார். இந்நிலையில், இன்று (மார்ச் 15) 6 வேட்பாளர்களையும் அண்ணா அறிவாலயத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு திருமாவளவன் அறிமுகம் செய்து வைத்தார். அவர்களை ஸ்டாலின் வாழ்த்தினார்.
பின்னர், திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
"விசிக வேட்பாளர்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் அறிமுகம் செய்தோம். காட்டுமன்னார்கோவில் தனித் தொகுதியில் கட்சியின் பொதுச் செயலாளர் சிந்தனைச்செல்வன், வானூர் தனித் தொகுதியில் கட்சியின் துணை பொதுச் செயலாளர் வன்னி அரசு, அரக்கோணம் தனித் தொகுதியில் கட்சியின் துணை பொதுச் செயலாளர் கௌதம சன்னா, நாகப்பட்டினம் தொகுதியில் கட்சியின் துணை பொதுச் செயலாளர் ஆளூர் ஷாநவாஸ், திருப்போரூர் தொகுதியில் துணை பொதுச் செயலாளர் எஸ்.எஸ்.பாலாஜி, செய்யூர் தனித் தொகுதியில் ஊடகப் பிரிவின் முதன்மைச் செயலாளர் பனையூர் பாபு ஆகியோர் போட்டியிடுகிறார்கள். 4 தனித் தொகுதிகள், 2 பொதுத் தொகுதிகளில் விசிக போட்டியிடுகிறது.
6 வேட்பாளர்கள் என்பதைவிட, 6 சட்டப்பேரவை உறுப்பினர்கள் என்ற நம்பிக்கையுடன், இந்தத் தேர்தல் களத்தில் இறங்குகிறோம். நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தல், இரண்டு அணிகளுக்கு இடையிலான பதவிக்கான போட்டி அல்லது அதிகாரத்திற்கான போட்டி என்று நாங்கள் பார்க்கவில்லை. எந்த அணி ஆட்சியைக் கைப்பற்றுகிறது என்பதற்கான அதிகாரத்திற்கான போட்டி என்று நாங்கள் கருதவில்லை. இரண்டு அணிகளுக்கான இந்தப் போட்டி என்பது, மதச்சார்பின்மைக்கும், மதவாதத்திற்கும் இடையிலான மக்கள் யுத்தம் என்றே இதனைப் பார்க்கிறோம்.
சமூக நீதியைப் பாதுகாக்க, ஜனநாயகத்தைப் பாதுகாக்க, மதச்சார்பின்மையைப் பாதுகாக்க, திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி களமிறங்குகிறது. இந்த மண்ணில் பெரியார், அண்ணா, அவர்களின் கொள்கை வாரிசு கருணாநிதி ஆகியோர், மதவாத சக்திகளுக்கு இடமில்லை என்கிற வகையில், தமிழ் மண்ணைச் சமூக நீதி மன்ணாக, பக்குவப்படுத்தி உள்ளார்கள். அதனால்தான், கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக, சாதி, மத வெறியர்களுக்கு அரசியல் களத்தில் காலூன்ற முடியாத ஒரு நெருக்கடி ஏற்பட்டது".
இவ்வாறு திருமாவளவன் தெரிவித்தார்.