

புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி வேட்புமனு தாக்கலும் கடந்த 12-ம் தேதி தொடங்கியது. தேர்தலுக்கு இன்னும் ஒரு சில வாரங்களே உள்ள நிலையில் பாஜக, என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக ஆகிய கட்சிகள் ஓரணியாகவும், காங்கிரஸ், திமுக ஓரணியாகவும் கூட்டணி அமைத்து பலப்பரீட்சையில் இறங்கியுள்ளன. மேலும் சில கட்சிகள் மற்றும் சுயேச்சைகளும் களம் காண்கின்றனர்.
இதையொட்டி கட்சிகளின் தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை மக்களை நேரில் சந்தித்தது வாக்குசேகரிக்க ஆயத்தமாகியுள்ளனர். சிலர் தீவிர வாக்கு சேகரிப்பிலும் ஈடுபட்டுள்ளனர். மேலும் சமூக வலைதளங்களில் தங்கள் கட்சியை ஆதரித்தும், எதிர் கட்சிகளை வெளுத்து வாங்கியும் பிரசாரம் செய்கிறார்கள். இதனால் தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.
அதேசமயம் பிரச்சாரத்தின் போது, பயன்படுத்தும் வகையில் தேசிய, மாநில கட்சிகளின் கொடிகள், கட்சி சின்னங்கள், துண்டுகள், தலைவர்கள் இடம்பெற்ற தொப்பிகள், தோரணங்கள், பேட்ஜ்கள், டிசர்ட்கள், பேனாக்கள் உள்ளிட்டவற்றின் விற்பனையும் தொடங்கியுள்ளன.
புதுச்சேரியில் உள்ள கடை வீதிகளில் பல்வேறு கட்சிகளின் பிரச்சார பொருட்கள் விற்பனைக்கும் வந்துள்ளன. தற்போது கரோனா காலக்கட்டம் என்பதால் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால் புதுச்சேரியில் புதுவிதமாக முகக்கவசத்திலும் பிரச்சாரம் தொடங்கியுள்ளது. கட்சித் தலைவர்களின் புகைப்படங்கள், கட்சியின் சின்னத்துடன் முகக்கவசங்களை அணிந்து கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட தொடங்கியுள்ளனர்.
இதனால் கடைகளிலும் கட்சித் தலைவர்கள், சின்னங்கள் பொறிக்கப்பட்ட முகக்கவசங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இதனை வாங்கிச் செல்வதில் பல்வேறு தரப்பினரும் ஆர்வம் காட்டி வருவதால், இத்தகைய முகக்கசங்கள் வரவேற்பை பெற்றுள்ளன.