

புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலையொட்டி, தேர்தல் ஆணையம், கலால்துறை, காவல்துறை அதிகாரிகள் இணைந்து மாநில எல்லை பகுதிகளில் சோதனைச் சாவடி அமைத்து, வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கதிர்காமம், தட்டாஞ்சாவடி, இந்திரா நகர் தொகுதிகளுக்கு உட்பட்ட தேர்தல் அதிகாரி முகமது மன்சூர் தலைமையிலான தேர்தல் பறக்கும்படை அதிகாரி முரளி குழுவினர், கோரிமேடு எல்லையில் நேற்று(மார்ச் 13) வாகன சோதனையில் ஈடுப்பட்டனர்.
அப்போது, புதுச்சேரியில் இருந்து தமிழக பகுதிக்கு சென்ற மினி வேனை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் உரிய ஆவணமின்றி 5 சிறிய பெட்டிகளில் ரூ.1.97 கோடி மதிப்பிலான தங்கம், வெள்ளி, பிளாட்டினம் நகைகள் அடுக்கி வைத்து எடுத்துச் செல்வது தெரியவந்தது.
மினி வேனில் வந்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டபோது, தமிழகத்தில் இருந்து புதுச்சேரி நகைக்கடைகளுக்கு கொண்டுவரப்பட்டு, மீண்டும் தமிழகத்துக்கு கொண்டு செல்வதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து சந்தேகமடைந்த தேர்தல் பறக்கும்படையினர் முறையான ஆவணங்கள் இல்லாததால், தங்கம், வெள்ளி, பிளாட்டினம் நகைகளை
வருமான வரித்துறை அதிகாரிகள் பரிந்துரைப்படி பறிமுதல் செய்யப்பட்டது. பின்பு, தேர்தல் செலவின பார்வையாளர் அப்ரஜித்தா சர்மா, தேர்தல் அதிகாரி முகமது மன்சூர் முன்னிலையில், பறிமுதல் செய்யப்பட்ட நகைகள், அரசு கருவூலத்தில் இன்று ஒப்படைக்கப்பட்டு பத்தரமாக வைக்கப்பட்டுள்ளது.