

திமுக தேர்தல் அறிக்கையில் பக்தர்களைக் கவரும் வகையில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில் முக்கியமானது, கோயில்களைப் புனரமைக்க நிதி ஒதுக்குவது, தீர்த்த யாத்திரை செல்பவர்களுக்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் பேருக்கு தலா 25,000 நிதி எனப் பல அறிவிப்புகள் உள்ளன.
திமுக 1949-ம் ஆண்டு திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து தனியாக கட்சி ஆரம்பித்தபோது அண்ணா தங்கள் கட்சி கடவுள் மறுப்புக் கொள்கையிலிருலிருந்து மாறுபடுகிறது. ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பது திமுகவின் கொள்கை என அறிவித்தார். ஆனாலும் திமுகவை இந்துக்களுக்கு எதிரான கட்சி என்பது போன்ற விமர்சனங்கள் சிலரால் வைக்கப்படுகின்றன.
தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த சில வருடங்களில் முதல்வர் கருணாநிதி கோயில் சொத்துகளைக் காக்க, தனியார் ஆக்கிரமிப்பில் உள்ள கோயில் சொத்துகள் பறிபோவதைத் தடுக்க அரசு நிர்வாகத்தின் கீழ் இந்து சமய அறநிலையத்துறையை உருவாக்கினார். அதற்காகத் தனி அமைச்சகமும் உருவாக்கப்பட்டது. கோயில் புனரமைப்பு, தேர்த் திருவிழா என நடத்தப்பட்டது.
அதன் பின்னர் பல்வேறு சமுதாயங்களைச் சேர்ந்தவர்களையும் அர்ச்சகராக்கத் திட்டம் கொண்டுவரப்பட்டது. இது தவிர சிறுபான்மை மதத்தவருக்கும் பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. அதில் ஒரு முக்கியமான திட்டம் ஹஜ் யாத்திரைக்கான மானியம் வழங்கும் திட்டம். பின்னர் ஜெயலலிதா அதில் பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வந்தார். ஜெருசேலம் செல்ல மானியம் வழங்கும் திட்டமும், அமர்நாத் யாத்திரைக்கான நிதியும் அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டது.
இந்நிலையில் தற்போது திமுக தேர்தல் அறிக்கையில் அர்ச்சகர் பயிற்சி முடித்து 15 ஆண்டுகள் காத்திருக்கும் 205 அர்ச்சகர்களுக்கு உடனடிப் பணி நியமனம் என அறிவித்துள்ளார். அதேபோன்று கோயில்களைப் புனரமைக்க ரூ.1000 கோடி ஒதுக்கப்படும் எனவும் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
* திருத்தணி, சோளிங்கர், திருநீர்மலை, திருச்சி மலைக்கோட்டை, திருச்செங்கோடு போன்ற கோயில்களில் கேபிள் கார் வசதி அமைக்கப்படும்.
* திமுக ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட பூசாரிகள் நல வாரியத்தில் இணைந்துள்ள கிராம கோயில் பூசாரிகளுக்கு மாதம்தோறும் ஊதியமாக 2000 ரூபாய் வழங்கப்படும். 60 வயதில் ஓய்வுபெற்ற பூசாரிகளுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் ரூ.3 ஆயிரத்தில் இருந்து 4 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.
* திருவண்ணாமலை கிரிவலப்பாதை கான்கிரீட் சாலையாகத் தரம் உயர்த்தப்படும். திருவண்ணாமலை தேரோடும் வீதி முழுவதும் கான்கிரீட் சாலையாக மாற்றப்படும்.
* தமிழகத்தின் அனைத்துக் கோயில்களிலும் உள்ள தெப்பக்குளங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் தூர்வாரப்பட்டு நீர் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.
* தமிழகத்தில் பழமை மாறாமல் அமைக்கப்படும் கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்யும் திட்டம் விரிவுபடுத்தப்படும்.
* தமிழகம் முழுவதும் உரிய காலம் கடந்தும் குடமுழுக்கு விழாக்கள் படுத்தப்படாத கிராம கோயில்கள் உள்ளிட்ட அனைத்துக் கோயில்களிலும் குடமுழுக்கு விழாக்கள் நடத்தப்படும். இதற்காக அரசு 1000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யும்.
* இந்து சமய அறநிலைத்துறை கோயில்களில் பணியாற்றும் பகுதி நேர மற்றும் ஒப்பந்தப் பணியாளர்கள் அனைவருக்கும் பணிகள் முறைபடுத்தப்பட்டு, முழுநேர அரசு ஊழியர்களாக்கப்பட்டு காலமுறை ஊதியம் விதிகள் மற்றும் ஓய்வு ஊதியங்கள் வழங்கப்படும்.
* தமிழக அறநிலையத் துறையின் கீழ் உள்ள இந்து சமய திருக்கோயில்களுக்கு தமிழகத்தில் உள்ள இந்து சமய மக்களின் வழிபாட்டு உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் அவர்கள் ராமேஸ்வரம், காசி, கேதார்நாத், பத்ரிநாத், திருப்பதி, பூரி ஜெகந்நாதர் ஆலயம் உள்ளிட்ட திருக்கோயில்களில் ஏதேனும் ஒன்றுக்கு ஆன்மிகச் சுற்றுலா செல்வதற்கும் இத்திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ஒருமுறை பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களின் பயணத்திற்காக அதிகபட்சம் 25 ஆயிரம் ரூபாய் வரை நிதி உதவிகள் வழங்கப்படும். இத்திட்டம் தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறை மூலமாகச் செயல்படுத்தப்படும்.
* மசூதிகள், தேவாலயங்கள் ஆகியவற்றை அமைப்பதற்கும் புதுப்பிப்பதற்கும் ஆண்டுக்கு 200 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.
* புனித நகரங்களான பழனி, திருத்தணி, திருவண்ணாமலை, திருவரங்கம், திருச்செந்தூர், ராமேஸ்வரம், கன்னியாகுமரி, சிதம்பரம், நாகப்பட்டினம், குற்றாலம், நாகூர், வேளாங்கண்ணி, வடலூர் ஆகியவற்றுக்கு பக்தர்கள் சுற்றுலா செல்லும் வகையில் பேருந்து நிலையங்கள் தங்கும் இடம் முதலியவை நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்படும்.
இவ்வாறு திமுக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளன.