

அதிமுக அரசு மீது ஸ்டாலின் வைத்த குற்றச்சாட்டு குறித்து ஒரே மேடையில் விவாதிக்க தயாரா? என தான் விடுத்த சவாலை ஏற்க ஸ்டாலின் தயாராக இல்லை என முதல்வர் பழனிசாமி பேசினார்.
தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் கூட்டணிக்கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் தேர்வு என தேர்தல் களம் பரபரப்பான சூழலில் இன்று மீண்டும் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கினார் முதல்வர் பழனிசாமி.
சேலம் மாவட்டம் வாழப்பாடியில், வேட்பாளர் சித்ராவுக்கு ஆதரவாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெள்ளிக்கிழமை மாலை பிரச்சாரம் செய்தார்.
அப்போது பேசிய முதல்வர் பழனிசாமி, அதிமுக அரசு மீது ஸ்டாலின் அடுக்கடுக்காக குற்றஞ்சாட்டினார், அவரது குற்றச்சாட்டுகள் குறித்து ஒரே மேடையில் விவாதிக்க ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்தோம். ஆனால் ஸ்டாலினிடம் இருந்து பதிலே இல்லை.
கருணாநிதியின் குடும்பம் ’வாரிசு அரசியல் குடும்பம்’ என்று குற்றஞ்சாட்டிய அவர், தனது குடும்பத்தில் இருந்து அரசியலுக்கு யாரும் வரமாட்டார்கள் என்று ஸ்டாலின் கூறினார், அவர் கூறியதை அவரே மறந்த நிலையில் தற்போது உதயநிதிக்கு சீட் வழங்கியுள்ளார்.
தமிழகத்தில் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும், முதல்வர் கனவில் மிதக்கும் ஸ்டாலின் நிஜத்தில் முதல்வராக வர முடியாது என்று முதல்வர் பழனிசாமி பேசினார்.
உதயநிதி ஸ்டாலினுக்கு சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட இன்று திமுகவில் சீட் வழங்கப்பட்ட நிலையில், முதல்வர் பழனிசாமி வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கக் கோரிக்கை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.