

தென்மாவட்டங்களில் பாஜகவைவிட கூடுதல் தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ் 3 தொகுதியில் மட்டும் நேருக்கு, நேர் களம் காண்கின்றன.
தமிழகத்தில் தேசிய கட்சிகளான பாஜக அதிமுக கூட்டணியிலும், காங்கிரஸ் திமுக கூட்டணியிலும் இணைந்து 2021க்கான சட்டப்பேரவை தேர்தலை சந்திக்கின்றன.
இதன்படி, அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 தொகுதிகளும், திமுகவில் காங்கிரஸ் கட்சிக்கு 25 இடங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
பாஜகவைப் பொறுத்தவரை தென்மாவட்டத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோயில், குளச்சல், விளவங்கோடு தொகுதியிலும், ராமநாதபுரம், சிவகங்கையில் காரைக்குடியிலும், மதுரை வடக்கிலும், விருதுநகரிலும், நெல்லையிலும் என, 8 தொகுதியிலும் போட்டியிடுகின்றன. தமிழகளவில் 23 மாவட்டங்களில் பாஜக போட்டியிடவில்லை.
காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரையிலும் தென் மாவட்டங்களில் 10 இடங்களில் களமிறங்குகிறது. மேலூர், காரைக்குடி, சிவகாசி, ஸ்ரீவைகுண்டம், குளச்சல், விளவங்கோடு, தென்காசி, நாங்குநேரி, திருவில்லிபுத்தூர், திருவாடனையில் காங்கிரஸ் வேட்பாளர்கள் நிறுத்தப்பட உள்ளனர்.
தமிழகளவில் செங்கல்பட்டு, வேலூர், தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், நாமக்கல், திண்டுக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், திருவாரூர், தஞ்சாவூர், தேனி ஆகிய 13 மாவட்டங்களில் காங்கிரஸ் கட்சி போட்டியில் இல்லை என்பது தெரியவந்துள்ளது.
தென் மாவட்டங்களில் பாஜகவைவிட, காங்கிரஸே அதிக தொகுதிகளில் போட்டியிடுகின்றன என்றாலும், குளச்சல், விளவங்கோடு, காரைக்குடி தொகுதியில் நேருக்கு, நேர் மோதுகின்றன.