பட்டுக்கோட்டையில் பழைய பேப்பர் கடையில் பாடப் புத்தகங்களை எடைக்கு விற்ற கல்வி துறை ஊழியர் கைது

பட்டுக்கோட்டையில் பழைய பேப்பர் கடையில் பாடப் புத்தகங்களை எடைக்கு விற்ற கல்வி துறை ஊழியர் கைது
Updated on
1 min read

பட்டுக்கோட்டை மாவட்டக் கல்வி அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த 500 பண்டல் பாடப் புத்தகங்களை திருடி, பழைய பேப்பர் கடையில் எடைக்கு விற்பனை செய்த கல்வித் துறை அலுவலக பணியாளரை போலீஸார் கைது செய்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், பட்டுக்கோட்டை மாவட்டக் கல்வி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள ஒரு அறையில், பட்டுக்கோட்டை சுற்றுவட்டார அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு, நிகழாண்டு கல்வி பருவத்துக்காக வழங்க வேண்டிய பாடப் புத்தகங்கள் வைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், மார்ச் 8-ம் தேதி இங்கு வைக்கப்பட்டிருந்த புத்தகங்களின் எண்ணிக்கை குறைந்திருப்பதாக கிடைத்த தகவலின்பேரில், அங்கு ஆய்வு செய்த பட்டுக்கோட்டை மாவட்டக் கல்வி அலுவலர் ஜான் பாக்கியசெல்வம், இதுதொடர்பாக பட்டுக்கோட்டை நகர காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

அதன்பேரில், பட்டுக்கோட்டை டிஎஸ்பி புகழேந்தி கணேஷ் தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தினர்.

அப்போது, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி எதிரே உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்ததில், பள்ளி வளாகத்திலிருந்து சரக்கு வாகனம் ஒன்று வெளியே வந்ததைக் கண்டறிந்தனர். அந்த வாகனத்தின் பதிவெண்ணை வைத்து விசாரணை நடத்தியதில், ஓட்டுநர் சரவணபெருமாள் பிடிபட்டார்.

அவரிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், மாவட்டக் கல்வி அலுவலகத்தில் பணியாற்றி வரும் தஞ்சாவூரைச் சேர்ந்த உதவி எழுத்தர் பிரபாகரன் (48) என்பவர், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான பாடப் புத்தகங்களில் தலா 100 எண்ணிக்கை கொண்ட 500 பண்டல்களை, பழைய புத்தகக் கடையில் எடைக்குப் போட்டு, விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, பிரபாகரனை நேற்று முன்தினம் போலீஸார் கைது செய்து, பழைய பேப்பர் கடையில் இருந்த புத்தகங்களையும், சரக்கு வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in