

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து 100-வது நாளாகப் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக திருச்சி பிஎஸ்என்எல் மண்டலப் பொது மேலாளர் அலுவலகத்தில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் இன்று (மார்ச் 06) போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்துக்கு சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமை வகித்தார்.
"விவசாயிகளுக்கு எதிரான 3 வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். 100 நாட்களாக டெல்லியில் கடும் குளிரில் போராடி வரும் விவசாயிகளை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வு காண வேண்டும். விவசாயிகளின் விளைபொருட்களுக்கு லாபகரமான விலை வழங்க வேண்டும். தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் பெற்ற கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும்" என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் போராட்டத்தில் முன் வைக்கப்பட்டன.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு அழிவுதான் ஏற்படும், விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதைத் தவிர வேறு வழியில்லை எனக் கூறி, அதற்கு அடையாளமாக எலும்புக் கூடுகளை பிரதமர் மோடிக்கு அஞ்சல் மூலமாக அனுப்பப் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் முயன்றனர். இதை போலீஸார் தடுத்ததால், அலுவலக வளாகத்தில் விவசாயிகள் தரையில் படுத்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து போலீஸார் அய்யாக்கண்ணுவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். தொடர்ந்து, அலுவலகத்துக்கு வெளியே சாலை மறியலில் ஈடுபட்ட அய்யாக்கண்ணு உள்ளிட்ட 85 விவசாயிகளை போலீஸார் கைது செய்தனர்.
இதனால், பிஎஸ்என்எல் அலுவலக வளாகத்தில் ஏராளமான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.