

கேரளத்தின் அருகேயுள்ள புதுச்சேரி பிராந்தியமான மாஹே பகுதியில் 18 கிலோ தங்கம் சிக்கியுள்ளது. இந்த நகைகள் பிரபல நகைக்கடைக்கு சொந்தமானது என ஆவணங்களை காட்டினாலும் வருமானவரித்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரியில் நான்கு பிராந்தியங்கள் உள்ளன. தமிழகத்தையொட்டி புதுச்சேரி, காரைக்காலும், ஆந்திரத்தையொட்டி ஏனாமும், கேரளத்தையொட்டி மாஹேயும் உள்ளது.
தேர்தல் விதிமுறைகள் அமலில் இருப்பதால், மாஹே எல்லையில் சோதனைச்சாவடிகள் அமைத்து வருவாய்த்துறை அதிகாரிகள், போலீஸார் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.
இந்த நிலையில், கோழிக்கோட்டில் இருந்து கண்ணூர் பகுதிக்கு மாஹே வழியே சென்ற, தனியார் நிதி நிறுவனத்திற்கு சொந்தமான வாகனத்தை நிறுத்தி அதிகாரிகள் இன்று (மார்ச் 5) சோதனை செய்தனர்.
அதில், ஏராளமான தங்கம் இருந்தது. இதையடுத்து, தாசில்தார் அலுவலகத்துக்கு வாகனத்தைக் கொண்டு சென்றனர்.
இதுபற்றி, மாஹே உயர் அதிகாரிகளிடம் கேட்டதற்கு, "வாகனத்தில் 18 கிலோ தங்கம் இருந்தது. அவர்கள் அப்பகுதியில் உள்ள பிரபல நகைக்கடைக்கு சொந்தமானது என்று தெரிவித்தனர். இத்தங்கத்தை தங்களின் கண்ணூர் அலுவலகத்திற்கு கொண்டு செல்வதாக கூறினர். இதற்கு உரிய ஆவணங்கள் இருக்கிறது. இருந்தாலும் வருமானவரித்துறை ஆய்வுக்கு உட்படுத்த, தங்கத்தை வாகனத்துடன் தாசில்தார் அலுவலகத்திற்கு கொண்டு சென்றுள்ளோம்" என்று தெரிவித்தனர்.