பூங்காவில் விளையாடிய 8 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி பலி: மின்சார வாரிய இயக்குனருக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் 

பூங்காவில் விளையாடிய 8 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி பலி: மின்சார வாரிய இயக்குனருக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் 
Updated on
1 min read

பூங்காவில் விளையாடச் சென்ற எட்டு வயது சிறுவன் மின்சாரம் தாக்கி பலியான விவகாரம் தொடர்பாக அறிக்கை அளிக்கும்படி, பேரூராட்சிகள் இயக்குனர், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக நிர்வாக இயக்குனருக்கு தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை தாம்பரத்தை அடுத்த சக்திநகர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வருபவர் வரதன்(41). கூலித் தொழிலாளியாக உள்ளார். இவருக்கு நிஷா என்கிற மனைவியும் கவுதம்(8) உள்ளிட்ட இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் மகன் கவுதம் நேற்று மதியம் பீர்க்கன்கரணை பேரூராட்சிக்கு உட்பட்ட பூங்காவில் விளையாடச் சென்றுள்ளார்.

அங்கு, விளையாடும்போது மின் விளக்கில் தொங்கிக் கொண்டிருந்த மின் கம்பியை எதிர்பாராத விதமாக சிறுவன் தொட்டதில் அவர் உடலில் மின்சாரம் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே பலியானார். மகனை காணவில்லையே என வந்த அவரது தாய் மகன் மின்சாரம் தாக்கி கிடப்பதை பார்த்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றார்.

அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதனால் சிறுவனின் உறவினர்கள், பொதுமக்கள் பீர்க்கங்கரணை பேரூராட்சி அதிகாரிகளின் அலட்சியத்தை கண்டித்து தாம்பரம் முடிச்சூர் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அங்கு வந்த பீர்க்கங்கரணை போலீஸார் சமாதனப்படுத்தி கலைந்துப்போகச் செய்தனர். பின்னர் சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்கு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.

நேற்று நடந்த இந்த சம்பவம் தொடர்பாக நாளிதழில் வெளியான செய்தியின் அடிப்படையில், மாநில மனித உரிமை ஆணையம், தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

இந்த சம்பவம் தொடர்பாக பேரூராட்சிகள் இயக்குனர், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக நிர்வாக இயக்குனர் ஆகியோர் இரண்டு வாரங்களில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய மனித உரிமை ஆணைய உறுப்பினர் ஜெயச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in