

பருவமழையால் கண் வலி மூலிகைக் கிழங்கு சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், கரூர், சேலம், நாகர்கோவில் உட்பட 12 மாவட்டங்களில் சுமார் 2,500 ஹெக்டேர் பரப்பளவில் மூலிகை கண் வலிக்கிழங்கு சாகுபடி நடைபெறுகிறது.
மத்திய அரசால் அழிந்து வரும் மூலிகைப் பட்டியலில் இடம்பெற்றுள்ள இப்பயிர், மருத்துவக் குணம் கொண்டது. வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஆடி மாதம் தொடங்கி மாசி மாதத்தில் அறுவடை நடைபெறும். திருப்பூர் அருகே உள்ள மூலனூர் இதற்கான முக்கியச் சந்தையாக உள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக இப் பயிருக்கு கட்டுப்படியான விலை கிடைப்பதில்லை எனவும் அதற்கு சில இடைத்தரகர்களே காரணம் எனவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் பருவ மழையால் பல இடங்களில் செடிகள் அழுகி அதன் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து தமிழ்நாடு கண் வலி மூலிகை விதை உற்பத்தியாளர் நலச் சங்கத்தின் மாநிலத் தலைவர் ப.லிங்கசாமி ’தி இந்து’-விடம் கூறியதாவது: வறண்ட நிலத்திலும் விளைச்சல் தரும் கண்வலி மூலிகைக் கிழங்கு, பனி மற்றும் தொடர் மழைக்கு தாக்குப் பிடிக்காது. ஒரு ஹெக்டேருக்கு 100 முதல் 150 கிலோ வரை விளைச்சல் கிடைக்கும். மழையால் சுமார் 100 டன் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு கிலோ சராசரி சந்தை மதிப்பில் ரூ.1,000 என்ற ரீதியில் சுமார் ரூ.10 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.
ஏற்கெனவே இடைத்தரகர் களால் சுமார் ரூ.50 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ள நிலையில், மழை பாதிப்பும், மூலிகைக் கிழங்கு விவசாயிகளை கவலையடைச் செய்துள்ளது.
மத்திய, மாநில அரசுகள் இதனை அங்கீகரிக்கப்பட்ட பயிராக அறிவிக்க வேண்டும். பிற விவசாயிகளைப் போல் மானியம், இழப்பீடு, பயிர்க்கடன், பாதுகாப்பு வசதிகளை பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மழையால் பாதிப்புக்குள்ளான இவ் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றார்.
இதுகுறித்து ஈரோடு மாவட்ட வேளாண் வணிக துணை இயக்குநர் சுப்பிரமணியம் கூறும்போது, ‘அங்கீகரிக்கப்பட்ட பயிராக இருந்தால் மட்டுமே ஒழுங்கு முறை விற்பனைக் கூடம் மூலம் விற்கவும், இருப்பு வைக்கவும், கடன் பெறவும் முடியும். மூலிகை கண் வலிக் கிழங்கை அங்கீகரிக்க அரசுக்கு ஏற்கெனவே கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் இதற்கு சாதகமான அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சில குறிப்பிட்ட பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளே ஒன்றிணைந்து ஒரு நிறுவனத்தை தொடங்க மத்திய அரசு திட்டம் வழிவகுத்துள்ளது. அதன்படி சுமார் 1,000 விவசாயிகள் இணைந்து உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தை தொடங்கலாம். இதற்கு அரசு உதவுகிறது. மேற்கண்ட விவசாயிகளும் இதனை ஏற்படுத்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது” என்றார்.