

மதுரையைச் சேர்ந்த கைவினை கலைஞர்கள் இருவரை பிரதமர் மோடி பாராட்டினார்.
பிரதமர் மோடி ஒவ்வொரு மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை ‘மன் கி பாத்’ என்ற பெயரில் வானொலியில் பேசி வருகிறார். இந்நிகழ்ச்சியில் நேற்று அவர் பேசும்போது மதுரை மேலக்காலைச் சேர்ந்த பி.எம்.முருகேசன், சுந்தராஜன்பட்டியைச் சேர்ந்த சோலைச்சாமி(77) ஆகி யோரைப் பாராட்டினார்.
இவர்களில் முருகேசன் கடந்த 7 ஆண்டுகளாக வாழைக் கழிவில் இருந்து கூடை, பேக், லைட் லேம்ப், டேபிள் மேட், ஜன்னல் கிரில், தரை விரிப்பு உட்பட 40 வகையான மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள் தயாரித்து ஏற்றுமதி செய்து வருகிறார்.
இது குறித்து அவர் கூறிய தாவது:
வாழைக் கழிவுகளில் இருந்து பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை தயாரித்து சந்தைப் படுத்தி வருகிறேன். இதனால் 400 பெண்கள் வேலைவாய்ப்பு பெறுகின்றனர். வாழை விவ சாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.6,000 வரை வருமானம் கிடைக்கிறது. வாழை நாரில் இருந்து கயிறு தயாரிக்கும் இயந்திரம் தயாரித்து காப்புரிமை பெற்றுள்ளேன்.
மன் கி பாத்தில் பிரதமர் என்னை பாராட்டியது ஆக்கமும், ஊக்கமும் கொடுத்துள்ளது. கிராமத்தில் தொழில் செய்வோரைக் கண்டு பிடித்து பிரதமர் வாழ்த்தியது வாழ்வில் மறக்க முடியாதது. என் தொழிலை இந்தியா முழுவதும் கொண்டுச் செல்வேன் என்றார்.
இவரை மதுரை மாவட்ட ஆட்சியர் அன்பழகன், மதுரை மாநகர் மாவட்ட பாஜக தலைவர் கே.கே.சீனிவாசன் மற்றும் நிர்வாகிகள் பாராட்டினர்.
பிரதமர் மோடி பாராட்டிய சுந்தராஜன்பட்டியைச் சேர்ந்த சோலைச்சாமி, மண்பாண்டங்கள் செய்யும் கலைஞர். இவர் கூறுகையில் பிரதமர் மோடியின் பாராட்டு மகிழ்ச்சி அளிப்பதாகக் கூறினார். இவருக்கு மனைவியும், 3 மகன்களும் உள்ளனர். இவரை மதுரை புறநகர் மாவட்ட பாஜக தலைவர் மகா சுசீந்திரன் மற்றும் நிர்வாகிகள் நேரில் சென்று பாராட் டினர்.