மீதமுள்ள 9.5% மக்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டாம் என்கிற முடிவுக்கு ராமதாஸ் வந்துவிட்டாரா?- திருமாவளவன் கேள்வி

கோப்புப் படம்.
கோப்புப் படம்.
Updated on
1 min read

வன்னியர்களுக்கு 20% இட ஒதுக்கீடு கேட்ட ராமதாஸ் எப்படி 10.5%க்கு ஒப்புக்கொண்டார்? அப்படி என்றால் மீதமுள்ள 9.5% மக்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டாம் என்கிற முடிவுக்கு வந்துவிட்டாரா? என்று விசிக தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பினார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. இன்று வாடிப்பட்டியில் நடந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநாட்டில் பங்கேற்றார். இதற்காக அவர் சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்தார்.

விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

''தேர்தல் ஆணையம் சுதந்திரமாக இயங்கவில்லை. அரசியல், பாஜக தலையீடு உள்ளது. மேற்கு வங்கத்தில் தமிழ்நாட்டைவிட, 60 தொகுதிகள் அதிகம். ஆனால், தமிழகத்தில் ஒரே கட்டம், மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாகத் தேர்தலை நடத்துவது அரசியல் உள்நோக்கம் என அறிய முடிகிறது. 1931-ல் எடுக்கப்பட்ட புள்ளிவிவரம் மட்டுமே சாதி அடிப்படையில் எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு. அதன்பிறகு ஓபிசி சமூகத்தில் சாதி அடிப்படையில் கணக்கெடுப்பு நிகழவே இல்லை. ஒருவேளை 10.5% வன்னியர்கள் இருக்கிறார்கள் எனில் 1931-ல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பாக இருக்க முடியும்.

இப்போது நடக்கும் 2021 தேர்தலை வைத்துப் பார்க்கும்போது, ஏறத்தாழ 70 ஆண்டுகளைக் கடந்து வந்திருக்கிறோம். 36ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் அடிப்படையில் வழங்கப்பட்ட இட ஒதுக்கீடு 2001 மக்கள்தொகை அடிப்படையில் வழங்கப்பட்டது. வன்னியர்களுக்கு 20% உள் இட இதுக்கீடு கேட்டவர் எப்படி 10.5%க்கு ஒப்புக்கொண்டார்? அப்படி என்றால் மீதமுள்ள 9.5% மக்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டாம் என்கிற முடிவுக்கு ராமதாஸ் வந்துவிட்டாரா? இது எந்த அடிப்படையில் ஒப்புக்கொள்ளப்பட்டது என்ற கேள்வி எழுகிறது. இது தேர்தல் நாடகமாகவே பார்க்கப்படுகிறது.

கடன் தள்ளுபடி போன்ற அறிவிப்பு உட்பட அனைத்தும் தேர்தல் நாடகம் என்றே கருத வேண்டி இருக்கிறது. சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தினால்தான் ஒவ் வொரு சமூகமும் எத்தனை சதவீதம் இருக்கிறார்கள் என, ஆதாரபூர்வமாக நம்மால் அறிய முடியும். இதன்பின் ஒதுக்கீடு போன்ற நடவடிக்கை எடுக்கலாம்''.

இவ்வாறு திருமாவளவன் கூறினார்.

மாநில பொதுச் செயலர் கனியமுதன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in